நாகை-இலங்கை இடையே வருகிற 13-ந் தேதி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து! விரைவில் அட்டவணை வெளியீடு!!



நாகை-இலங்கை இடையே வருகிற 13-ந் தேதி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அட்டவணை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந் தேதி கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ‘செரியாபாணி’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நாட்களிலேயே அதாவது அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. இதனால் இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து எப்போது தொடங்கும் என பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில் நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறை ஏற்கனவே இயக்கப்பட்ட ‘செரியாபாணி’ கப்பலுக்கு மாற்றாக ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் மே மாதம் 13-ந் தேதி முதல் நாகை-இலங்கை இடையே பயணத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

‘சிவகங்கை’ கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜி.எஸ்.டி. வரியுடன் ரூ.5 ஆயிரம், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜி.எஸ்.டி. வரியுடன் ரூ.7 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அந்தமானில் தயாராகியுள்ள ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் மே 10-ந் தேதி நாகை துறைமுகம் வரும் என்ற தகவலும் வெளியாகி உளளது. ஆனால் நாகை-இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பான எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

இதுகுறித்து நாகை துறைமுக அலுவலர் மானேக் ஷா கூறுகையில், ‘நாகையில் இருந்து இலங்கைக்கு ‘செரியாபாணி’ என்ற கப்பல் இயக்கப்பட்டது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த கப்பல் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. மீண்டும் நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து துறையிடம் இருந்து ஒப்புதல் பெற்றபின் முறையான போக்குவரத்து அட்டவணை வெளியிடப்படும்’ என்றார்.

நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படாததால் இருநாடுகளை சேர்ந்த பயணிகளும் குழப்பம் அடைந்துள்ளனர்.
கப்பல் போக்குவரத்து குறித்த அதிகாரபூர்வ அட்டவணையை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments