கீரமங்கலத்தில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபர் கைது செல்போன் சிக்னல் மூலம் போலீசார் பிடித்தனர்




கீரமங்கலத்தில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபரை செல்போன் சிக்னல் மூலம் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

சங்கிலி பறிப்பு

கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி சரண்யா (வயது 33). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமிகள் சரண்யா கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்தனர்.

மேலும், அருகே இருந்த செல்போன் மற்றும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு வராண்டாவில் தூங்கிய சரண்யாவின் மாமியார் மலர்கிளியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது அவர் சத்தம் போட்டதால் மர்ம ஆசாமிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிறையில் அடைப்பு

இந்தநிலையில், சரண்யாவின் செல்போன் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு தற்போது இயங்கி வந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த செல்போனை வைத்திருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மரக்காயர் தெருவை சேர்ந்த முகமது மாஜித் (25) என்பவரிடம் இருந்து செல்போனை வாங்கியதாக தெரிவித்தார். அதன்பேரில் முகமது மாஜித்தை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்த போது சரண்யாவின் தங்க சங்கிலியை பறித்து சென்றதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அந்த தங்க சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் முகமது மாஜிக்கை கீரமங்கலம் போலீசாரிடம் தனிப்படையினர் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கீரமங்கலம் போலீசார் முகமது மாஜிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து முகமது மாஜிக்கை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments