கர்நாடகத்தில் 280 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை 20 மணி நேர போராட்டத்துக்கு பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
280 அடி ஆழ்துளை கிணறு
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் லச்யானா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். அவருடைய மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. சதீசின் தந்தை சங்கரப்பா விவசாயி ஆவார். லச்யானா கிராமத்தில் சங்கரப்பாவுக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு அவர் எலுமிச்சை உள்ளிட்டவை சாகுபடி செய்துள்ளார். அங்கேயே வீடு கட்டி அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
தங்களது நிலத்தில் சங்கரப்பா ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். 280 அடி ஆழத்துக்கு தோண்டியும் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆழ்துளை கிணற்றை மூடாமல் அப்படியே விட்டு விட்டனர். நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிய குழந்தை சாத்விக் திடீரென்று காணாமல் போய் விட்டது. இதையடுத்து, தனது குழந்தையை பூஜா தேடினார்.
16 அடி ஆழத்தில் குழந்தை
அப்போது ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்திருப்பது தெரியவந்தது. உடனே அவர் டார்ச் லைட்டை அடித்து பார்த்தார். அப்போது குழந்தை உள்ளே கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து குழந்தையை மீட்கும் பணி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் பூபாலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் கிராமத்திற்கு விரைந்து வந்தார்கள். ஆழ்துளை கிணற்றுக்குள் கிடந்த குழந்தைக்கு குழாய் மூலமாக ஆக்சிஜன் செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது. 16 முதல் 20 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
விடிய, விடிய மீட்பு பணி
குழந்தை தலைகீழாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்திருந்ததால் குழந்தையின் கால்கள் மட்டும் தெரிந்தது. உடனே ஐதராபாத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரங்கள் மூலமாக குழி தோண்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் குழந்தையின் கால் பகுதி ஆழ்துளை கிணற்றின் மேற்பரப்பில் இருந்ததால், காலில் கயிற்றை கட்டி மேலே தூக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அந்த முடிவு கைவிடப்பட்டது. ஏனெனில் குழந்தை 16 அடி ஆழத்தில் சிக்கி இருந்ததால், ஆழ்துளை கிணறு அருகே குழிதோண்டி மீட்டு விடலாம் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து, ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டும் பணிகள் விடிய, விடிய நடைபெற்றது.
பாறைகள் உடைப்பு
10 முதல் 12 அடி ஆழத்துக்கு குழி தோண்டும் வரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் 12 அடி ஆழத்துக்கு மேல் பாறைகள் இருந்ததால் குழந்தையை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. பாறைகளை வெடி வைத்து உடைத்தால், அதனால் ஏற்படும் அதிர்வால் குழந்தை ஆழமான பகுதிக்கு சென்று விட வாய்ப்புள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்தார்கள். இதையடுத்து எந்திரங்கள், கைகள் மூலமாகவே பாறைகளை உடைக்கும் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
குழந்தை உயிருடன் மீட்பு
நேற்று மதியம் 20 அடி ஆழத்திற்கு கீழ் பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் இருந்து ஆழ்துளை கிணற்றில் குழந்தை சிக்கியிருந்த பகுதிக்கு பக்கவாட்டில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளையிட்டனர். அந்த துளை வழியாக நுழைந்த மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் குழந்தை சாத்விக்கை தனது கையால் கெட்டியாக பிடித்து வெளியே தூக்கி வந்தார். அப்போது குழந்தைக்கு உயிர் இருப்பதாகவும், எந்த ஆபத்தும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
குழந்தைக்கு சிகிச்சை
இதனால் அங்கிருந்த சாத்விக் தந்தை சதீஷ், தாய் பூஜா மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தார்கள். கிராம மக்களும் குழந்தையை உயிருடன் மீட்டு இருப்பதால் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
20 மணி நேரமாக சூரிய ஒளியை பார்க்காமலும், உணவு, தண்ணீர் இல்லாமலும் ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவித்ததால் குழந்தை சாத்விக் சோர்வாக இருந்தது. இதனால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, குழந்தையின் உடலில் காயங்களும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.