தேக்காட்டூர் ஊராட்சியை புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து கிராமமக்கள் மறியல்




தேக்காட்டூர் ஊராட்சியை புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் புதுக்கோட்டை மாநகராட்சியோடு கிராமங்களை இணைக்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் தேக்காட்டூர் ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்க கூடாது என வலியுறுத்தி நமணசமுத்திரம் அருகில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேக்காட்டூர் ஊராட்சியை மாநகராட்சியோடு இணைப்பதால் வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் அதிகமாகும். மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் பறிபோகும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

சாலை மறியல்

இதையடுத்து தேக்காட்டூர் ஊராட்சி கிராமமக்கள் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நமணசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராமமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியட் சீசர் மற்றும் திருமயம் தாசில்தார் புவியரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தேக்காட்டூர் ஊராட்சியை சார்ந்த கிராமமக்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு செய்ய போவதாகவும் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments