வேங்கைவயல் வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு




வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்தது தொடர்பான வழக்கு ஜூலை 3-ந் தேதிக்குள் விசாரித்து முடிக்கப்படும் என்று நம்புவதாக ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

வேங்கைவயல்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி வக்கீல் மார்க்ஸ் ரவீந்திரன், ராஜ்கமல் ஆகியோர் தனித்தனியாக பொதுநல வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

தேர்தல் புறக்கணிப்பு

இந்த ஒரு நபர் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் மார்க்ஸ் ரவீந்திரன் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜி.எஸ்.மணி, “இந்த வழக்கில் மாநில அரசு மெத்தனமாக செயல்படுகிறது. வழக்கு விசாரணையில் தீவிரம் காட்டவில்லை. அதனால், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை வேங்கைவயல் கிராம மக்கள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 மாதங்களாகியும் முடிவுக்கு வரவில்லை. ஒரு நபர் ஆணையம் அறிக்கை கொடுத்தும் ஓர் ஆண்டாகி விட்டது'' என்று வாதிட்டார்.

குரல் சோதனை

உடனே நீதிபதிகள், இந்த வழக்கின் புலன் விசாரணை ஏன் இவ்வளவு தாமதம் ஏற்படுகிறது? இந்த விசாரணை எப்போது முடிவுக்கு வரும்?'' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் கதிரவன், “இந்த வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது குரல் மாதிரி சோதனை நடத்த விசாரணை கோர்ட்டில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதுவரை, 337 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்படும்'' என்று கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் வழக்கின் புலன் விசாரணையை விரைவாக மேற்கொண்டு முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments