சேதுபாவாசத்திரம் அருகே வலையில் சிக்கிய ஆமைகளை கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு




வலையில் சிக்கிய ஆமைகளை கடலில் விட்ட மீனவர்களுக்கு அதிகாாிகள் பாராட்டு தெரிவித்தனர்.

அாிய வகை உயிரினங்கள்

தஞ்சை மாவட்டம், தம்பிக்கோட்டை வடகாடு முதல் குப்பத்தேவன் கிராமம் வரை 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 32 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள், விசைப்படகு, நாட்டுப்படகு மூலம் கடலில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடலில் உள்ள அரிய வகை உயிரினங்களான கடற்பசு, ஆமைகள், கடல் அட்டைகள் உள்ளிட்ட உயிரினங்கள் மீனவர்களின் வலைகளில் சிக்கினால் அவற்றை மீண்டும் கடலில் விடுமாறு மாவட்ட வனத்துறையினர் அவ்வப்போது மீனவர்கள் மத்தியில் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அபூர்வ வகை கடல் ஆமை

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மல்லிப்பட்டினம் கடற் பகுதியில், சின்னமனை மீனவ கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், சுரேஷ், சத்யராஜ் ஆகியோர் படகில் மீன் பிடித்தபோது அவர்களது வலையில் சுமார் 5 கிலோ எடை கொண்ட அபூர்வ வகை கடல் ஆமை சிக்கியது.

மீன் வலையை கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது, அதில் ஆமை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆமையை மீனவர்கள் மீண்டும், கடலில் விட்டனர்.

இதைப்போல சோமநாதன்பட்டினம் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ், கமல், வீரமணி, சூர்யா, அண்ணாநகர் புதுத்தெருவைச் சேர்ந்த மதன்ராஜ், முத்துராஜா, புதுப்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஜான், பால்சாமி, சக்தி ஆகியோர் சென்ற படகிலும் ஆமைகள் வலைகளில் சிக்கின. இந்த ஆமைகளையும் மீனவர்கள் கடலில் விட்டனர்.

பாராட்டு சான்றிதழ்

இதுகுறித்த வீடியோ பதிவு வனத்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பட்டுக்கோட்டை வனச்சரகர் சந்திரசேகரன் கூறியதாவது:-

தஞ்சாவூர் மாவட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர்கள் மத்தியில் அரியவகை கடல் உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பாக வனத்துறை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலில் உள்ள ஆமைகள் மீனவர்களின் வலையில் சிக்கின. இந்த ஆமைகளை மீனவா்கள் கடலில் விட்டனர். இந்த தகவல் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களுக்கு வனத்துறை சார்பில் அடுத்த மாதம் நடைபெற உள்ள கடற்பசு தினத்தில் ஊக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments