நாடாளுமன்ற தேர்தல் 2024: புதுக்கோட்டையில் 71.72 சதவீதம் வாக்குப்பதிவு



நாடாளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 71.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

வாக்குச்சாவடிகள்

நாடாளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,560 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் திருச்சி தொகுதிக்குட்பட்ட கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,01,921 ஆண் வாக்காளர்களும், 1,00,930 பெண் வாக்காளர்களும், 12 திருநங்கைகளும் என 2,02,863 வாக்காளர்களும், புதுக்கோட்டையில் 1,20,149 ஆண் வாக்காளர்களும், 1,25,677 பெண் வாக்காளர்களும், 23 திருநங்கைகளும் என மொத்தம் 2,45,849 வாக்காளர்களும் உள்ளனர்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் சட்டமன்ற தொகுதியில் 1,14,124 ஆண் வாக்காளர்களும், 1,20,060 பெண் வாக்காளர்களும், 5 திருநங்கைகளும் என 2,34,189 வாக்காளர்களும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 1,04,988 ஆண் வாக்காளர்களும், 1,06,292 பெண் வாக்காளர்களும், 3 திருநங்கைகளும் என 2,11,283 வாக்காளர்களும் உள்ளனர்.

மொத்த வாக்காளர்கள்

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குபட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 1,09,970 ஆண் வாக்காளர்களும், 1,11,942 பெண் வாக்காளர்களும், 15 திருநங்கைகளும் என மொத்தம் 2,21,927 வாக்காளர்களும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 1,13,582 ஆண் வாக்காளர்களும், 1,15,667 பெண் வாக்காளர்களும், 1 திருநங்கையும் என 2,29,250 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் 6,64,734 ஆண் வாக்காளர்களும், 6,80,568 பெண் வாக்காளர்களும், 59 திருநங்கைகளும் என மொத்தம் 13,45,361 வாக்காளர்களும் உள்ளனர். வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியதும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர். முதலில் வாக்குப்பதிவு மெதுவாக நடைபெறுவதை போல் இருந்தது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் தாமதமானதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதனை அதிகாரிகள் சரி செய்ததும் வாக்குப்பதிவு சீராக நடைபெற்றது.

வாக்குப்பதிவு அதிகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 11.04 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது. அதன்பின் நேரம் செல்ல செல்ல... மக்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வரத்தொடங்கினர். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க தொடங்கியது. காலை 9 முதல் 11 மணி வரை வாக்குப்பதிவு 25.45 சதவீதமும், காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை 43.19 சதவீதமும் பதிவானது. தொடர்ந்து பகல் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை 54.90 சதவீதமும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை 66.09 சதவீதமும் பதிவானது.

மதியத்திற்கு மேல் மக்கள் அதிகளவில் வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் ஓரளவு அதிகரித்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

71.72 சதவீதம்

மாலை 6 மணிக்கு பிறகு ஒரு சில இடங்களில் வாக்காளர்கள் இருந்ததால் டோக்கன் அடிப்படையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்பின் வாக்குப்பதிவு கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 71.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. மொத்தம் 13,45,361 வாக்காளர்களில் 9,62,496 பேர் வாக்களித்து இருந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 74.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த தேர்தலில் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments