மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: தேர்தலை புறக்கணித்த பொதுமக்கள் வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையம்




மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற தேர்தலை பொதுமக்கள் புறக்கணித்தனர். இதனால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி கிடந்தது.

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

புதுக்கோட்டை நகராட்சியை தரம் உயர்த்தி மாநகராட்சியாக உருவாக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையொட்டி ஊராட்சியில் சில பகுதிகளை புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் பல்வேறு இடங்களில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் பதாகைகளை வைத்து இருந்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டை முள்ளூர் பஞ்சாயத்து கும்மபபட்டி கிராமத்தில் அடிப்படை வசதி இல்லாததை கண்டித்தும், தங்கள் கிராமத்தை புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பலர் வாக்களிக்க செல்லவில்லை. இதேபோல் திருக்கட்டளை, தேக்காட்டூர் பகுதியில் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பலர் வாக்களிக்கவில்லை.

பேச்சுவார்த்தை

இதேபோல் தேக்காட்டூர் ஊராட்சியை சேர்ந்த சிவபுரம், மழுக்கன்பட்டி, கம்மன்செட்டிசத்திரம், கீழதேமுத்துப்பட்டி, மேலதேமுத்துப்பட்டி, இளங்குடிபட்டி ஆகிய கிராமங்கள் புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்தநிலையில் மேல தேமுத்துப்பட்டி தொடக்கப்பள்ளியில் நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் நீண்ட நேரமாகியும் கிராம மக்கள் ஒருவர் கூட வாக்களிக்கவரவில்லை. இதனால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடியது. இருப்பினும் அதிகாரிகள் வாக்காளர்களை எதிர்பார்த்து காத்து கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் தாசில்தார் புவியரசன், கிராம நிர்வாக அலுவலர் பெலிக்ஸ் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடையாத கிராமமக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 2,298 வாக்குகள் உள்ளன. ஆனால் அதில் 30 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments