அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் தீவிரம்: புதுப்பொலிவு பெறும் புதுக்கோட்டை ரெயில் நிலையம்




புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் தீவிரத்தால் புதுப்பொலிவு பெறுகிறது

அடிப்படை வசதிகள்

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்ரித் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்திலும் தெற்கு ரெயில்வேயில் ஏராளமான ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் மதுரை கோட்டத்தில் புதுக்கோட்டை ரெயில் நிலையமும் அம்ரித் திட்டப்பணிகளில் இடம்பெற்றுள்ளது. புதுக்கோட்டை ரெயில் நிலையம் வழியாக திருச்சி, சென்னை, ராமேசுவரம், காரைக்குடி உள்பட வடமாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்களில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகள் மூலம் ரெயில்வேக்கு வருவாயும் அதிகரித்துள்ளது.

பணிகள் மும்முரம்

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அம்ரித் திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ரெயில் நிலையத்தின் முகப்பில் நுழைவுவாயில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ரெயில் நிலையத்தில் முதலாவது மற்றும் 2-வது நடை மேடையில் லிப்ட் அமைக்கும் பணிகள் மும்முராக நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது நடைமேடையில் பெருமளவு பணிகள் முடிந்து விட்டன. 2-வது நடைமேடையில் லிப்ட் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதேபோல ரெயில் நிலைய நடைமேடைகளில் ரெயில் பெட்டிகள் நிற்கும் இடம் எண் ஆகியவற்றை அறியும் வகையில் டிஜிட்டல் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல ரெயில்கள் வந்து செல்லும் நேரம் விவரங்கள் டிஜிட்டல் பலகையில் ஒளிபரப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் காத்திருப்பு அறை புதிதாக கட்டப்பட்டு வருகிறது. ரெயில் நிலைய நடைமேடைகளில் விடுபட்ட இடங்களில் மேற்கூரை முழுமையாக அமைக்கும் பணி தொடங்கி நடைபெறுகிறது.

கிரானைட் இருக்கைகள்

இதேபோல நடைமேடைகளில் பயணிகள் அமருவதற்கு கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள், மாற்றுத்திறனாளிகள் அமருவதற்கான இருக்கைகள், உடைமைகள் வைப்பதற்கான இருக்கை வசதி, சிறுவர்கள் அமருவதற்கான இருக்கைகள் என ஒவ்வொரு அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரெயில் நிலையத்திற்கு வரும் கார்கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்த புதிய வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகிறது. ரெயில் நிலையத்தில் நடைபெறும் இந்த பணிகள் மூலம் புதுக்கோட்டை ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெறுகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் புதுக்கோட்டை ரெயில் நிலையம் புதிய தோற்றத்தில் காணப்படும். நடைமேடையில் ரெயில் பெட்டி நிற்கும் இடத்தை அறிவதற்கான `கோச் இன்டிகேஷன் போர்டு' எனப்படும் டிஜிட்டல் பலகை இல்லாமல் இருந்து வந்த புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தற்போது அந்த வசதியுடன் கூடுதலான வளர்ச்சி பணிகள் நடைபெறுவதை பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments