மையப்பகுதியில் பொருத்துவதற்காக இரவு நேரத்திலும் பாம்பன் கடலில் தூக்குப்பாலத்தை தூண்கள் வழியாக நகர்த்தும் பணி தீவிரம்
மையப்பகுதியில் பொருத்துவதற்காக பாம்பன் கடலில் இரவு நேரத்திலும் மின்விளக்கு வெளிச்சத்தில் 600 டன் எடை கொண்ட புதிய தூக்குப்பாலத்தை தூண்கள் வழியாக நகர்த்தும் பணி தீவிரம் அடைந்து உள்ளது.

புதிய ரெயில் பாலம்

பாம்பன் கடலில் ரூ.545 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணியானது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது.புதிய ரெயில் பாலத்தின் மிக முக்கிய பணிகளில் ஒன்றான மையப் பகுதியில் தூக்குப்பாலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் நடைபெற உள்ளது.

அதற்காக பாம்பன் நுழைவு பகுதியில் இருந்து சுமார் 600 டன் எடையும், 77 மீட்டர் நீளமும் கொண்ட தூக்குப்பாலத்தை தூண்கள் வழியாகவே நகரும் கிரேன் மூலம் நகர்த்தி கொண்டுவரும் பணி கடந்த 1 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்றது. இதுவரை 100 மீட்டர் தூரம் நகர்த்தி கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 150 மீட்டர் தூரத்துக்கு மேல் நகர்த்தி கொண்டுவரப்பட்டு அதன் பின்னர் மையப்பகுதியில் உள்ள தூண்களில் இந்த தூக்குப்பாலம் பொருத்தப்பட உள்ளது.

இரவு நேரத்திலும்...

இந்த நிலையில் மையப்பகுதியில் அமைக்கப்பட உள்ள தூக்குப் பாலத்தை தூண்கள் வழியாக நகரும் கிரேன்கள் மூலமாக நகர்த்தி கொண்டுவரும் பணியானது பகல் மற்றும் இரவு நேரங்களிலும் நடைபெற்று வருகின்றது. அதற்காக புதிய தூக்குப்பால பகுதியில் கூடுதலாக மின்விளக்குகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

மே மாதத்திற்குள் இந்த தூக்குப்பாலத்தை மையப்பகுதிக்குள் கொண்டு வந்து பொருத்தப்படும் என்றும் அதன் பின்னர் பாம்பன் நுழைவு பகுதியில் இருந்து மையப்பகுதி வரையிலும் அமைக்கப்பட்டுள்ள தூண்களில் இரும்பு கர்டர் மற்றும் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெறும். 3 மாதத்திற்குள் பாம்பன் ரெயில்வே பாலப் பணிகள் நிறைவு பெறும் என்றும் ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments