கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த வியாபாரி நைனா முகமது கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் மறியல்-போக்குவரத்து பாதிப்பு!



மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த வியாபாரி நைனா முகமதுவை கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வியாபாரி உயிரிழப்பு

மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் சின்னப்பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் குலாம் ரசூல் மகன் நைனா முகமது (வயது 42). இவர் மீமிசலில் நேஷனல் மளிகை ஷாப் (நேஷனல் கூல்டிரிங்க்ஸ்) கடையை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ரம்ஜானியா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வழக்கமாக காலை 5.30 மணிக்கு கடையை திறந்து இரவு 11.00 மணி வரை வியாபாரம் செய்து கை பேக்கில் சராசரியாக வியாபார பணம் ரூ.70,000 ரொக்கமாக எடுத்துக்கொண்டு வீடு திரும்புவார்.

இதையடுத்து நேற்று 22.04.2024, இரவு 11.30 PM வரை வியாபாரம் செய்து தாமதமாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். SBI வங்கி வழியே கோபாலப்பட்டிணம் வீட்டுக்கு வருவது அவரது வழக்கம். அவ்வாறு நேற்று 22.04.2024 இரவு 11:45 மணிக்கு மேற்படி வழியாக மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி என் கணவர் அவருடைய இருசக்கர வாகனத்தில் வரும்பொழுது மீமிசல் SBI வங்கி அருகே என் கணவரை இரும்பு ராடை கொண்டு அடையாளம் தெரியாத குண்டர்கள் தலையில் பலமாக தாக்கி அவருடைய பணப்பேக்கையும் திருடிச்சென்றிக்கிறார்கள். தலையில் பலமாக தாக்கியதால் நிலை குலைந்து உயிருக்கு போராடிய நிலையில் சம்பவ இடத்திலேயே கீழே கிடந்துள்ளார். அவ்வழியே சென்ற கோபாலப்பட்டிணத்தைச் சேர்ந்த இரு நபர்கள் 11.48 PM மணிக்கு ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு என் கணவரை மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நைனா முகமது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சாலை மறியல்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நைனா முகமது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தனது கணவர் மர்ம ஆசாமிகளால் கொலை செய்யப்பட்டு உள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் மேலும் என ரம்ஜானியா கோரிக்கை விடுத்தார். மேலும் அவரது உறவினர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதம், மீமிசல் இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்த வழக்கை துரிதமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை

இதையடுத்து, போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் நைனா முகமது கொலை செய்யப்பட்டாரா?, அல்லது விபத்தா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து மோப்பநாய் வர வழைக்கப்பட்டது. அந்த நாய் சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments