மீமிசல் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த 5 வாலிபர்கள் கைது




மீமிசல் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த 5 வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 55), விவசாயி. இவரது மனைவி அன்னக்கிளி (47). இவர்கள் கடந்த 19-ந் தேதி தங்களது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவு அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், அன்னக்கிளி கழுத்தில் இருந்த 5½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து சுப்பையா கொடுத்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே அறிவுறுத்தலின் பேரில் கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு கவுதம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

வாகன சோதனை

இந்த தனிப்படை போலீசார் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து, தனிப்படை போலீசார் அங்குள்ள சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக 5 வாலிபர்கள் 4 மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

5 பேர் கைது

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த மரிய அந்தோணி (32), முத்துக்குமார் (22), கெனிவின்ஸ் (18), கண்ணன் (21), பிரவீன் (34) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 5 பேரும் அன்னக்கிளியிடம் நகையை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து மீமிசல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 5½ பவுன் தங்க சங்கிலி மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments