கந்தர்வகோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலப்பு அதிகாரிகள் விசாரணை




கந்தர்வகோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

உடல்நலம் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம் விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் ஆதிதிராவிடர் மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு கடந்த 2013-14-ம் ஆண்டு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தால் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இப்பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவருக்கும், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கும் கடந்த2 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அருகே உள்ள திருவோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

மாட்டு சாணம்

இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டது. அப்போது அந்த தண்ணீர் கலங்கலாக வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி சென்று பார்த்தனர். அப்போது தொட்டியில் இருந்த தண்ணீரில் மாட்டு சாணம் கலந்து இருந்தது தெரியவந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஆணையர் பெரியசாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, கிராம நிர்வாக அலுவலர் சுபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்தது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

கடும் நடவடிக்கை

இதனைதொடர்ந்து குடிநீர் தொட்டியில் இருந்த கழிவை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணத்தை மர்ம ஆசாமிகள் கலந்து இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் பெரியசாமி தெரிவித்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு அருகே உள்ள மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் தற்போது கந்தர்வகோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments