கொத்தமங்கலத்தில் செல்போனில் மூழ்கும் குழந்தைகளை மீட்கும் பாரம்பரிய விளையாட்டுகள்




செல்போனில் மூழ்கி கிடக்கும் குழந்தைகள், பள்ளி மாணவர்களை மீட்டெடுக்க கொத்தமங்கலத்தில் பாரம்பரிய விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

பாரம்பரிய விளையாட்டுகள்

கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் அய்யனார் கோவில் திடலில் உடற்கல்வி இயக்குனர்கள் வெண்முகில், பாலகுமாரி, உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களான கோகுல், அருண் ஆகியோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கோடை கால இலவச விளையாட்டு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

இதில், உடற்பயிற்சிகளுடன் பாரம்பரிய விளையாட்டுகளான பம்பரம் சுற்றுதல், பளிங்கி அடித்தல், டயர் உருட்டுதல், பனை நுங்கு வண்டி ஓட்டுதல், ஆலமரத்தில் ஊஞ்சல் விளையாட்டு, வாழை மரம் ஏறுதல், ராட்டையில் தண்ணீர் இழுத்தல், முகடு ஏற்றம், ஓட்டம், நடை, குதித்தல், புலன் உணர் பயிற்சிகள், சிறுவர்களுக்கு தவளை ஓட்டம், பாம்பு போல ஊர்ந்து செல்லுதல், தடை தாண்டுதல், குரல்வள பயிற்சி, கோலாட்டம், பல்லாங்குழி, காசிக்காய், யோகா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. இதில், 3 வயது குழந்தைகள் முதல் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் வரை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு விளையாடி வருகின்றனர்.

செல்போன் மோகம் குறையும்

இதுகுறித்து பயிற்சியாளர்கள் கூறியதாவது:- கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்ல வழியின்றி செல்போன் விளையாட்டுகளுக்கு அடிமையான குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளை மீட்டெடுக்க பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுத்து வருகிறோம். இந்த பயிற்சி மையத்தில் அனைத்து பயிற்சிகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற்ற 40-க்கும் மேற்பட்டோர் சீருடைப்பணிகளுக்கு சென்றுள்ளனர்.

தற்போது கோடை விடுமுறையில் மாணவர்கள் செல்போன்களில் மூழ்கி விடாமல் இருக்க உடற்பயிற்சியுடன் சேர்த்து மறைந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுக்கிறோம். ஆர்வத்துடன் வந்து பயிற்சி பெறும் சிறுவர்களிடம் ஒரு தனித்திறன் உள்ளதை காண முடிகிறது. அவர்களுக்கு தேவையான சிறப்பு பயிற்சிகளை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.

இதனால் செல்போன் பாதிப்புகளும், வேறு கவனச்சிதறல்களும் சிறுவர்களுக்கு வராமல் தடுக்கிறோம். நாங்கள் பயிற்சி அளிப்பதை பார்த்து பல பெற்றோர்களும் உற்சாகமாக தங்களது குழந்தைகளை இங்கு விளையாட அழைத்து வருகிறார்கள். சிறுவர்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும் சிறுவர்களுக்கு தேவையான உதவிகளை உள்ளூர் இளைஞர்கள் தானாக முன்வந்து செய்கின்றனர். அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்பதும், செல்போனில் சிறுவர்கள் மூழ்காமல் தடுப்பதும் முதல் இலக்காக வைத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments