இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு




தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்' எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் காணப்படும். இதற்கிடையே, ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெயில்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் கோடை காலமாக கருதப்படுகிறது. இதில் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசும்.

ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது.

அதிலும் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. இயல்பை விட இந்த ஆண்டு மிக அதிகமாக வெப்பம் நிலவுவதால் மக்கள் தவித்து வருகிறார்கள். சில இடங்களில் வெயிலுடன் சேர்ந்து வெப்ப அலை வீசியதால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால், மோர், இளநீர், பழச்சாறு உள்ளிட்ட நீர் ஆகாரங்களை அதிகம் உட்கொண்டே வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் சமாளித்து வருகிறார்கள்.

கத்திரி வெயில் தொடக்கம்

இதற்கிடையே, ‘அக்னி நட்சத்திரம்' என்று கூறப்படும் கத்திரி வெயில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும். கத்திரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரை கத்திரி வெயில் என்ற வார்த்தையை பயன்படுத்துவது கிடையாது. தமிழ் பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே கத்திரி வெயில் கணக்கிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கத்திரி வெயில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. பொதுவாகவே கத்திரி வெயிலின் போதுதான் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இன்று தொடங்கும் கத்திரி வெயிலின் தாக்கம் வரும் 28-ந் தேதி வரை நீடிக்கும். அதாவது, 25 நாட்கள் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும், சில மாவட்டங்களில் கோடை மழையும் பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னையில் நேற்று தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெப்பநிலை அதிகரிக்கும்

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரித்து காணப்படும். இதேபோல, வட உள் தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கும். வருகிற 6-ந் தேதி வரை வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவும். மார்ச் 1-ந் தேதி முதல் தற்போது வரை 74 சதவீதம் இயல்பை விட குறைவான மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயில் பதிவாகும்.

பொதுவாகவே மே மாதத்தில் கோடை மழையை நாம் பெரிதும் எதிர்பார்க்க முடியாது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை. மே மாதம் என்றாலே அது கோடை காலம். எனவே, கோடை மழை பெய்யும்போது மட்டுமே வெப்பம் குறையும். இல்லையேல் வெப்பம் குறைய வாய்ப்பில்லை. மத்திய பகுதிகளில் மேக கூட்டங்கள் குறைவாகவும், காற்றின் ஈரப்பதம் குறைவாகவும் இருக்கும் போது வெயில் நேரடியாக விழும். அப்படி இருக்கும் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஒருவேலை கோடை மழை பெய்தால் மட்டுமே வெப்பத்தின் அளவு குறையும்.

சென்னையில்...

சென்னையில் வெப்பத்தின் அளவு குறைவாக இருந்தாலும் வெப்பத்துடன் கூடிய ஈரப்பதம் இருப்பதால் நமக்கு வெயிலினால் அசவுகரியங்கள் ஏற்படுகிறது. காலநிலை மாற்றத்தால் மட்டுமே வெப்பம் அதிகரிப்பது இல்லை. இடத்தை பொறுத்து வெப்பத்தின் அளவு அதிகரிக்கும். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சராசரியாக ஈரோட்டில் 6 நாட்களும், கரூரில் 4 நாட்களும் தொடர்ந்து வெப்ப அலை பதிவாகியுள்ளது. ஈரோட்டில் மட்டுமே 27 நாட்கள் தொடர்ந்து 104 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு வெப்ப அலையின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோடை மழை பெய்யும்

தமிழகத்தில் கத்திரி வெயில் சுட்டெரித்தாலும் அவ்வப்போது மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கோடை மழையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் தலா 1 செ.மீ. கோடை மழை பெய்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். இதேபோல, மே 7-ந் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments