பாம்பன் பாலத்தின் மையப்பகுதியை நோக்கி 600 டன் தூக்குப்பாலத்தை நகர்த்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியது




பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியை நோக்கி 600 டன் எடை கொண்ட தூக்குப்பாலத்தை நகர்த்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பாம்பன் பாலம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.550 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்காக கடலுக்குள் 333 தூண்கள் கட்டப்பட்டு உள்ளன.

அதுபோல் மண்டபத்தில் இருந்து மையப்பகுதி வரையிலும் தூண்கள் மீது இரும்பு கர்டர் பொருத்தும் பணி முடிவடைந்துவிட்டது. பாலத்தின் மையப்பகுதியில் அமைய உள்ள 77 மீட்டர் நீளமும், சுமார் 600 டன் எடையும் கொண்ட தூக்குப்பாலத்தை பாம்பனில் பாலத்தின் நுழைவு பகுதியில் தயார் செய்து, அங்கிருந்து நகரும் கிரேன் வழியாகவே தூண்கள் வழியாக நகர்த்தும் பணி கடந்த 1 மாதத்திற்கு மேலாகவே நடந்து வருகிறது. இந்த பணியானது இரவு-பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நிலைநிறுத்தும் பணி

தற்போது அது இறுதிக்கட்டத்தை எட்டி, அதாவது தூக்குப்பாலத்தின் அருகில் உள்ள தூண்கள் வரை நகர்த்தி கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் மையப் பகுதிக்கு கொண்டு வந்து, அதனை நிலைநிறுத்தும் பணி தொடங்கும்.

இது பற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “விரைவில் புதிய தூக்குப்பாலம் கடல் நடுவே நிலை நிறுத்தப்பட உள்ளது. அதன் எடையை தாங்கும் வகையில் சில ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்காக கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் கடந்து செல்லும் கடல் பாதையில் ராட்சத இரும்பு குழாய்களை கடலுக்குள் அமைக்கும் பணி இன்னும் சில நாட்களில் தொடங்கும்” என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments