பிளஸ்-2 பொதுத்தேர்வில் 93.79 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் அதிகம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 93.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் ஆவர்.

93.79 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 174 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 83 மாணவர்களும், 9 ஆயிரத்து 737 மாணவிகளும் என மொத்தம் 17 ஆயிரத்து 820 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர்.

இதில் 7 ஆயிரத்து 355 மாணவர்களும், 9 ஆயிரத்து 359 மாணவிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 714 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.79 ஆகும். மாணவர்கள் 90.99 சதவீதம் பேரும், மாணவிகள் 96.12 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் தேர்வு எழுதியதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போன்களில் பார்வையிட்டனர்

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானதும் மாணவ-மாணவிகள் தங்களது செல்போனில் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மேலும் கணினியில் இணையதள முகவரியில் பார்த்தனர். தேர்வு முடிவுகள் மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வழக்கம் போல் அனுப்பப்பட்டன. இதில் மாணவ-மாணவிகள் தங்களது மதிப்பெண் விவரத்தை தெரிந்து கொண்டனர்.

தனியார் பள்ளிகளில் அந்தந்த பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளின் விவரங்களை பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டினர். மேலும் மாணவ-மாணவிகளை வரவழைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாராட்டினர். இதேபோல் அரசு பள்ளிகளிலும் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் வருமாறு:- புள்ளியியல், மைக்ரோ பயாலஜி, பயோ-கெமிஸ்ட்ரி, நர்சிங், அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர். தமிழ் பாடத்தில் 99.11 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 97.62 சதவீதம் பேரும், இயற்பியலில் 98.63 சதவீதம் பேரும், வேதியியலில் 99.23 சதவீதம் பேரும், பயலாஜியில் 99.62 சதவீதம் பேரும், தாவரவியலில் 99.57 சதவீதம் பேரும், விலங்கியல் பாடத்தில் 99.29 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

கணினி அறிவியல் பாடத்தில் 99.80 சதவீதம் பேரும், புவியியலில் 99.23 பேரும், கணிதத்தில் 98.71 சதவீதம் பேரும், வரலாறு பாடத்தில் 98.91 சதவீதம் பேரும், பொருளாதாரத்தில் 96.52 சதவீதம் பேரும், வணிகவியல் பாடத்தில் 96.46 சதவீதம் பேரும், கணக்குப்பதிவியலில் 93.84 சதவீதம் பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியியலில் 98.65 சதவீதம் பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேசன்சில் 98.52 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

வெறிச்சோடிய அரசு பள்ளிகள்
பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவ-மாணவிகள் தாங்கள் தேர்ச்சியா? இல்லையா? என்பதையும், மதிப்பெண்கள் விவரத்தை அறியவும் அதிக ஆர்வத்துடன் பரபரப்பாக இருப்பார்கள். அவர்களது பெற்றோர்களும் கூடுதல் ஆர்வத்துடன் காணப்படுவர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடுதல், செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல் மூலமாக தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் எளிதில் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் அவர்களிடையே பதற்றமும் ஏற்படுவதில்லை. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதும் அரசு பள்ளிகளில் அந்தந்த பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விவர பட்டியல் ஒட்டப்படும். மேலும் மாணவ-மாணவிகளும் பள்ளிக்கு படையெடுத்து வருவார்கள். ஆனால் தற்போது தங்களது உள்ளங்கையில் செல்போனில் மதிப்பெண்கள் முழுவிவரத்தை பாடவாரியாக அறிந்து கொள்வதால் பெரும்பாலானோர் பள்ளிக்கு வருவதில்லை. அதுபோல் தான் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் புதுக்கோட்டை நகரப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மதிப்பெண்களை பார்வையிட பள்ளிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், கணினி ஆபரேட்டர்கள், அலுவலக பணியாளர்கள் மட்டுமே வந்திருந்தனர். அவர்கள் தேர்வு தொடர்பான முடிவுகளில் தங்களது பள்ளிகளுக்கான விவரத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்தனர். மாணவ-மாணவிகள் யாரும் பள்ளிக்கு வந்தார்களா? என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்ட போது யாரும் வரவில்லை என தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments