புதுக்கோட்டையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்




புதுக்கோட்டையில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பள்ளி வாகனங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வில் பங்கேற்க மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் வேன்கள், பஸ்கள் முறையாக பராமரித்து எடுத்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தன. இதில் 549 வாகனங்கள் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்ததில் 265 வாகனங்கள் வந்திருந்தன. அதனை இயக்கும் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களும் வந்திருந்தனர்.

கூடுதல் கலெக்டர் அப்தாப் ரசூல் தலைமையில் ஆர்.டி.ஓ.க்கள் ஜெயந்தி, சிவகுமார், வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெய்சங்கர் உள்பட மோட்டார் வாகன அதிகாரிகள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

பாதுகாப்பு உபகரணங்கள்

இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களுக்கு முறையாக பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிசீட்டு உள்ளதா?, வாகனங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா? தீயணைப்பான் கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி உள்ளிட்டவையும், வாகனங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ஆய்வின் போது வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படாததை சரி செய்து கொண்டு வர அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதில் 24 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. ஆய்வுக்கு வராத மற்ற வாகனங்கள் அடுத்தடுத்து ஆய்வுக்குட்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments