கடற்பசுக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கடலோரக் கிராமங்களில் தீவிர பிரசாரம்




அழிந்துவரும் அரிதான கடல்வாழ் உயிரினங்களில் ஒன்றான கடற்பசுக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டக் கடலோரக் கிராமங்களில் வனத் துறையினரின் பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை தமிழ்நாட்டின் தஞ்சை மற்றும் புதுகை மாவட்டக் கடலோரப் பகுதியில் 448 சதுரகிமீ பரப்பளவில் அமைக்க கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கடல்வாழ் உயிரினங்களில் அரிதான அழிந்து வரும் உரியினங்களில் ஒன்றாக இருக்கும் கடற்பசுக்கள், இந்தப் பகுதியிலுள்ள கடற்புற்களை உண்டு வாழ்கின்றன. சுமாா் 240 கடற்பசுக்கள் தற்போது இங்கு இருப்பதாக ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூா் மாவட்டத்தில் மனோரா பகுதியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடியக்கரை பகுதியிலும் கடற்பசுப் பாதுகாப்பு மையங்கள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. இதன் முதல்கட்டமாக கடலோரக் கிராமங்களில் மீனவா்களிடையே கடற்பசுக்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வனத் துறை முடிவு செய்தது.

இதன்படி, தஞ்சை மற்றும் புதுகை மாவட்ட கடலோரக் கிராமங்களில் 50 இடங்களில் விழிப்புணா்வு பிரசாரம் நடத்தப்படுகிறது.

இப்பணியில் உள்ள நெல்லையைச் சோ்ந்த அரும்புகள் அறக்கட்டளை என்ற சூழலியல் அமைப்பின் இயக்குநா் லதா மதிவாணன் கூறியது:

கடற்பசுக்கள் ஆழம் குறைந்த, வெயில் அதிகம் ஊடுருவக்கூடிய கடற்பகுதியில் அதிகம் வாழ்கின்றன. கடல்தாழை என்றழைக்கப்படும் புற்களை உணவாக உண்டு தினமும் நீண்ட தொலைவு நீந்திப் பயணம் செய்யக் கூடிய இயல்பைக் கொண்டவை. எனவே, அவை வெளியிடும் எச்சங்களை நண்டு, இறால் போன்ற இதர உயிரினங்கள் உண்டு வாழ்கின்றன.

எனவே, மீனவா்களுக்கு கடற்பசு உற்ற நண்பன் என்பதைச் சொல்ல வேண்டியுள்ளது. அதைத்தான் இந்தத் திட்டத்தில் வனத்துறை, ஓம்காா் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்கிறோம். மீனவா்களின் வலைகளில் கடற்பசுக்கள் சிக்கினால் வலையை அறுத்துவிட்டு அவற்றை கடலில் விட்டுவிட வேண்டும். அவ்வாறு செய்வதை விடியோ பதிவு செய்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தால், அச் செயலுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வனத்துறை வழங்குகிறது. அறுந்துபோன வலைகளை வாங்கிக் கொள்ளவும் வனத்துறை உதவுகிறது.

இவற்றுடன் கடலில் வாழும் கடற்குதிரை, கடல் ஆமை, கடல் அட்டை போன்ற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும், கடலோரப் பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எங்கள் பிரசாரத்தில் மக்களிடம் வலியுறுத்துகிறோம்.

பிரசாரத்தின் முடிவில் சிறாா்களிடம் கேள்விகளைக் கேட்டு சரியான பதிலைத் தருவோருக்கு பரிசுகளையும் வழங்குகிறோம். கடலோர கிராமத்திலுள்ள 15 பள்ளிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டோம். 35 கிராமங்களில் இப்போது விழிப்புணா்வு பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. வரும் வியாழக்கிழமையுடன் (மே 16) இப்பணிகள் நிறைவடைகின்றன என்றால் லதா மதிவாணன்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments