கோடை வெயில் எதிரொலி: அரசு விரைவு ஏ.சி. பஸ்களில் தினசரி கூடுதலாக ரூ.30 லட்சம் வசூல்




கோடை வெயில் காரணமாக அரசு விரைவு போக்குவரத்து கழக ஏ.சி. பஸ்களில் தினசரி கூடுதலாக ரூ.30 லட்சம் வசூலாவதாக மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் தெரிவித்து உள்ளார்.

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழ்நாட்டில், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் உள்ள இடங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஆயிரத்து 68 நெடுந்தூர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோடை வெயில் காரணமாக ஏ.சி. பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் கூறியதாவது:-

கோடை விடுமுறைக்கு முன்பு மாற்று பஸ்கள் (ஸ்பேர் பஸ்கள்) தவிர்த்து வார நாட்களில் 850 பஸ்களும், வார விடுமுறை நாட்களில் ஆயிரம் பஸ்களும் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை என்பதால் பயணிகள் போக்குவரத்து அதிகரித்து உள்ளதன் காரணமாக வார நாட்களில் 950 பஸ்களும், வார விடுமுறை நாட்களில் மாற்று பஸ்கள் உள்பட ஆயிரத்து 60 பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

ரூ.30 லட்சம்கூடுதல் வருவாய்

அதே போல், கோடை விடுமுறைக்கு முன்பு 265 முதல் 270 ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்து உள்ளதால் பயணிகள் ஏ.சி. பஸ்களில் அதிக அளவில் பயணம் செய்ய முன்வருகின்றனர். இதனால், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாற்று பஸ்கள் உள்பட தினசரி 326 ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு கிடைக்கிறது. இதே போன்று, அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் தற்போது முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது சாதாரண நாட்களில் வழக்கத்தைவிட 5 ஆயிரம் பயணிகள் கூடுதலாக முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். அதே போன்று வார இறுதி நாட்களில் வழக்கத்தைவிட 10 ஆயிரம் பயணிகள் கூடுதலாக முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.

மின்னணு எந்திரம்

கடந்த காலங்களில், ஒரு மாதத்திற்கு முன்பு தான் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஆனால், தற்போது அதனை திருத்தி அமைத்து 2 மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு மாதமும் வாரநாட்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளில் 3 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கி வருகிறோம்.

மேலும், கடந்த 1-ந் தேதி முதல் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து பஸ்களிலும் ஜி-பே, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வகையில் மின்னணு எந்திரங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் டிக்கெட் பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளதுடன், கண்டக்டர்களின் பண பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் பணிச்சுமையும் குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments