புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு: 2 கிராமங்களில் கடையடைப்பு போராட்டம்




புதுக்கோட்டை மாநகராட்சியை தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து 2 கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கடையடைப்பு போராட்டம்

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதில் நகராட்சியையொட்டியுள்ள திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், முள்ளூர் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைத்து அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்புக்கு ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநகராட்சி அறிவிப்பை திரும்ப பெற கோரியும் திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 2 கிராமங்களில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

சுவரொட்டி

இந்த பகுதிகளில் உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டம் தொடர்பாக ஆங்காங்கே சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தன. மேலும் மாநகராட்சி அறிவிப்பை திரும்ப பெற கோரியும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் போது தங்களது கிராமத்தில் வரியினங்கள் அதிகரிக்கும் எனவும், 100 நாள் வேலை திட்டம் பாதிக்கும் எனவும், அரசின் சலுகைகள் பாதிக்கப்படும் எனவும், அதனால் மாநகராட்சியாக தரம் உயர்த்த தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments