வருகிற கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் 5 இடங்களுக்குள் புதுக்கோட்டை வர இலக்கு! கலெக்டர் மெர்சி ரம்யா தகவல்!!
வருகிற கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் 5 இடங்களுக்குள் புதுக்கோட்டை வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

மீளாய்வு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு, மாதிரி, ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி முடிவு பகுப்பாய்வு குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக அரசு, மாதிரி, ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகளில் 2024-ம் ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் பள்ளி வாரியாக தேர்ச்சி அறிக்கை, பாடவாரியாக சராசரி மதிப்பெண், தேர்ச்சி பெறாத மாணவர்கள் விவரம், தேர்ச்சி பெறாத மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண், வருகை சதவீதம், தேர்ச்சி பெறாமைக்கான காரணம் ஆகியவை குறித்து தலைமை ஆசிரியர்களிடம் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.

பள்ளி மேலாண்மை குழு

மேலும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா கூறியதாவது:- 3 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு சரியாக வருகை புரியாத 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் குறித்த விவரத்தினை மாதத்திற்கு 3 முறை கூட்டப்படும் பள்ளி மேலாண்மை குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்று, அக்குழுவின் வாயிலாக அத்தகைய மாணவர்களை தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிய செய்ய வேண்டும்.

3 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வருகை புரியாமல் உள்ள 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பற்றிய விவரத்தினை 3 மாதத்திற்கு ஒருமுறை ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் தெரியப்படுத்திட வேண்டும்.

கவுன்சிலிங்

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனைவரையும் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செய்து, சிறப்பு பயிற்சி வகுப்பு வாயிலாக துணைத்தேர்வில் தேர்ச்சி பெறச்செய்து, உயர் வகுப்புகளில் சேர்ந்து அவர்கள் தொடர்ந்து பயில்வதற்கு வழிகாட்டிட வேண்டும். கவுன்சிலிங் தேவைப்படும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் ஏதாவது ஓரிடத்தில் வேலையில் சேர்ந்திருப்பதாக தகவல் தெரியவந்தால் வேலையில் பணியமர்த்தியவர்கள் பற்றிய தகவலை உடனடியாக தாசில்தாருக்கு தெரிவிக்க வேண்டும்.

முதல் 5 இடங்களுக்குள்...

வருகிற கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம், அரசு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் 5 இடங்களுக்குள் வந்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 95 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி விழுக்காட்டினை எட்டிடவும், பள்ளிகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு இலக்கினை அடைந்திட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் ரமேஷ் (புதுக்கோட்டை), ராஜேஸ்வரி (அறந்தாங்கி), தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments