புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை கலெக்டர் தகவல்






புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் மெர்சி ரம்யா கூறினார்.

கண்காணிப்புக்குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஊரக உள்ளாட்சி, பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக திருத்தியமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி ஊரகப்பகுதிகள், பேரூராட்சிகள், நகராட்சிப்பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த வேண்டும், அந்த இடங்களில் புதிதாக நிழல் தரும் மரங்கள் அல்லது பலன்தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும், விதைகள் தூவி புதிய மரம், செடிகளை உருவாக்க வேண்டும் என அதன் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

முற்றிலுமாக அகற்ற வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றிடும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்னவாசல், அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டை,கறம்பக்குடி, மழையூர், குன்றாண்டார்கோவில், குளத்தூர், மணமேல்குடி, பொன்னமராவதி, புதுக்கோட்டை, திருமயம், திருவரங்குளம், விராலிமலை, நீர்பழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற ஊராட்சி அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைத்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், இணை இயக்குனர் (வேளாண்மை) பெரியசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments