புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக புகார்; சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றம் போலீசார் நேரில் விசாரணை




புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக வந்த புகாரில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றப்பட்டது. மேலும் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

குடிநீர் தொட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை அருகே சங்கம்விடுதி கிராமத்தில் குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி புகார் எழுந்தது.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள், கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குடிநீர் தொட்டியில் கிடந்த கழிவு பொருளையும், நீரையும் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர்.

மாட்டு சாணம் இல்லை

திருச்சியில் உள்ள மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகத்தில் அந்த குடிநீர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த குடிநீர் மாதிரியானது குடிப்பதற்கு உகந்தது என்றும், நோய்க்கிருமி தொற்றுகள் எதுவும் இல்லை எனவும் தெரியவந்தது. இதையடுத்து குடிநீர் தொட்டியில் கிடந்த கழிவு பொருள் மாட்டு சாணம் இல்லை எனவும், அந்த கழிவு பொருள், குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருந்ததில் ஏற்பட்ட பாசிக்கழிவு எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவும், குடிநீர் தொட்டியில் கழிவு பொருள் கிடந்த விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட தொட்டியில் கழிவு பொருளை யாரேனும் கலந்திருந்தால் நடவடிக்கை எடுக்கவும் தெரிவித்திருந்தனர்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

இந்த நிலையில் கறம்பக்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், சங்கம்விடுதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலந்தது தொடர்பாக வேறு புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்த கோரியிருந்தார். இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் விசாரணை நடத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து அந்த வழக்கு புதுக்கோட்டை சி.பி.சி.ஐ.டி.க்கு நேற்று மாற்றப்பட்டது. மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரியாக திருச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கு தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் இருந்து ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெற்றனர்.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு தில்லைநடராஜன் தலைமையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சங்கம்விடுதியில் விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியை பார்வையிட்டனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.

இதில் குடிநீர் தொட்டியை பராமரித்தல் குறித்தும், கடைசியாக சுத்தம் செய்யப்பட்டது குறித்தும் விவரங்களைகேட்டறிந்தனர். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.

இரட்டை குவளை முறை

இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் டீக்கடைகளில் இரட்டை குவளை முறை உள்ளதாக எழுந்த புகாரில் மதுரை ஐகோர்ட்டு விசாரணை நடத்த அறிவுறுத்தியிருந்தது. அது தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசின் மற்றொரு குழுவினர் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments