உலகிற்கே சோறு போடும் தஞ்சை நெற்களஞ்சியத்தில் வரலாற்றை கற்றுத்தரும் சுற்றுலா தலங்கள் இருப்பதை எல்லோரும் அறிவர். இங்கு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட ‘ஒரு கடல் களஞ்சியமும்’ இருக்கிறது என்பதை சிலரே அறிந்து வைத்துள்ளனர். அதிகம் அறியப்படாத அந்த கடல் அழகு கொட்டி கிடக்கும் இடம் ‘புதுப்பட்டினம்’.
மலைநாடாகிய சேரநாடு, யானைகளை உடையது. தென்னாடாகிய பாண்டி நாடு, முத்து உடையது. தொண்டை நாடு, சான்றோர் உடையது. சோழ வளநாடு, சோறு உடையது. சோறு உயிர் கொடுப்பதால் எல்லா நாட்டையும் விட சோழ நாடே சிறந்தது என்கிறது பழமையான பாடல் ஒன்று.
புதுப்பட்டினம் கடற்கரை
இயற்கை தனது கருணையை வாரி வழங்கி நெல் மணிகளை மிகுதியாக விளைவிப்பதும் இந்த சோழ நாட்டில் தான். கருணை கண்களை மூடி வறட்சியின் கோரப்பிடியை இறுகப்பிடிப்பதும் இங்கே தான். இயற்கையாகவே நெல் மிகுதியாக விளையும் சோழ பூமியில் வயல் அழகிற்கு மத்தியில் புதுப்பட்டினம் எனும் பகுதியில் கடல் அழகும் தாண்டவமாடுகிறது.
தமிழர்களின் நீர் மேலாண்மையால் நீர் நாடு, நீர்வள நாடு என அறியப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மைய நாடியாக காவிரி ஆறு விளங்குகிறது. காவிரியின் கிளை நதிகள் அதிகமாக பாயும் டெல்டா மண்ணில் சென்னை மெரினா போல ரம்மியமான கடற்கரையாக கண்முன் பரந்து விரிந்து எழில் விருந்து படைக்கிறது புதுப்பட்டினம் கடற்கரை.
தஞ்சையில் ஒரு மெரினா
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள இந்த ‘தஞ்சை மெரினா’வுக்கு சமீப காலமாக படையெடுத்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தஞ்சை மண்ணின் மைந்தர்களுக்கு ‘பீச்’களின் சகவாசம் சற்று குறைவு தான். பீச்களை தேடி இந்த பகுதி மக்கள் நெடுந்தூர பயணம் மேற்கொள்ள ேவண்டி இருந்தது. இந்த சூழலில் தஞ்சை மாவட்ட மக்கள் மீது கடல் காற்றை வீசி ஆறுதல்படுத்தி வருகிறது புதுப்பட்டினம் பீச். இந்த பகுதி தற்போது பிரபலமாக தொடங்கி உள்ளதால் பீச் மீதான தஞ்சை மாவட்ட மக்களின் ஏக்கம் சற்று தணிந்து வருகிறது எனலாம். பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு புதுப்பட்டினம் கடற்கரை சிறந்த பொழுதுபோக்கு தலமாக மாறி உள்ளது.
ஆசுவாசமாக உலா...
1 கி.மீ. தூரத்துக்கும் அதிகமான மணல் பரப்பு, நீல வானத்தை தழுவியதா? தழுவவில்லையா? என குழப்பத்துடன் ரசிக்க வைக்கும் கடல் பரப்பு என கவனத்தை கொள்ளை கொள்கிறது புதுப்பட்டினம் கடற்கரை. அந்திசாயும் வேளையில் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் ஆசுவாசமாக உலா வர ஏற்ற கடற்கரை.
வார விடுமுறை நாட்களில் அலுவலக ஊழியர்கள் கூடி அளவளாவும் ‘பேவரைட் ஸ்பாட்டாக’ உருவெடுத்து வரும் புதுப்பட்டினம், ெசன்னை மெரினா அளவுக்கு இல்லை என்றாலும், மெரினாவை போல் குதிரை சவாரி, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், கடை வீதிகள், சுண்டல் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை என களைகட்டி வருவதை காண முடிகிறது.
சுற்றுலா வசதிகள்
பல்வேறு ஊர்களில் இருந்து கார், வேன், மோட்டார் சைக்கிள்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புதுப்பட்டினம் கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வாகன நெரிசலும் ஏற்படுகிறது. புதுப்பட்டினம் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் புதிதாக சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.
வாகனங்கள் நெரிசல் இன்றி வெளியேறுவதற்கான மாற்றுச்சாலையை உருவாக்க வேண்டும். குடிநீர், கழிவறை, உடைமாற்றும் அறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இங்கு சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவது குறித்து பேராவூரணி எம்.எல்.ஏ. அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொழுதுபோக்கு அம்சங்கள்
சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டினத்தில் கடலோரம் உள்ள அழகிய மனோராவுக்கு அடுத்தபடியாக புதுப்பட்டினம் கடற்கரையும் பிரபலமாகி வருகிறது. மனோராவில் சிறுவர் பூங்கா, படகு சவாரி, ஓய்வு அறை என சுற்றுலா பயணிகள் விரும்பும் வசதிகள் உள்ளன. அதேபோல புதுப்பட்டினம் கடற்கரையிலும் பொழுதுபோக்குக்கு ஏற்ற அம்சங்களை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் சுற்றுலா ஆர்வலர்கள்.
பெருவுடையார் கோவிலின் வானுயர்ந்த பெரிய கோபுரம், வரலாற்றை கண்முன் நிறுத்தும் மனோரா என கட்டிடக்கலையால் கவனம் ஈர்த்து வரும் தஞ்சை மண்ணில் கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை சூழலுடன் மனதுக்கு அமைதி தரும் கடற்கரையாக ‘நீலச்சிறகு’ விரிக்கிறது புதுப்பட்டினம்!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.