புதிய வகை கொரோனா பரவல்: பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்




புதிய வகை கொரோனா பரவி வருவதால், பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் நேற்று, வீடியோ வெளியிட்டு பேசியதாவது:-

அச்சம் வேண்டாம்

கடந்த சில வாரங்களாக சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருகிறது. புதிய வகையான கேபி.2 என்ற வைரஸ் ஒமைக்ரானின் ஒரு வகையை சேர்ந்தது தான். ஏற்கனவே, இந்தியாவில் சில பகுதிகளில் இந்த வகை கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை நாம் பயமோ, பதற்றமோ அடையத் தேவையில்லை. லேசான பாதிப்பு மட்டுமே தான் பதிவாகியுள்ளது. மிகப்பெரிய பாதிப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை. தமிழகத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த வகை பாதிப்பு ஏற்பட்டாலும் லேசான பாதிப்பாக தான் அது இருக்கும். ஆனாலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முகக்கவசம் அணிய வேண்டும்

பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். வீட்டில் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் இருக்கும் பொழுது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு உடனே தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்பொழுது கொரோனா பாதிப்பும் மற்ற பருவ நிலையில் ஏற்படக்கூடிய நோய் பாதிப்பு போல மாறிவிட்டது. வருடத்திற்கு ஒரு சில காலங்களில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் அச்சம் தேவையில்லை. தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்டதால் போதுமான எதிர்ப்பு சக்தி நம்மிடம் இருக்கிறது. அப்படி பாதிப்பு அதிகரித்தாலும் அதனை சமாளிக்கக்கூடிய கட்டமைப்பு வசதிகள் தமிழகத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments