சாயல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 3 சக்கர சைக்கிளில் சென்றபோது கார் மோதி சிறுவன் உள்பட 3 பேர் பலி




விளாத்திகுளம் அருகே 3 சக்கர சைக்கிளில் சென்றபோது கார் மோதி சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.

பழைய பொருட்களை சேகரித்து விற்பனை

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் ரெங்கன். இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 35). இவர் 3 சக்கர சைக்கிளில் தனது குடும்பத்தினருடன் ஊர் ஊராக சென்று பழைய பேப்பர், அட்டை, பாட்டில்கள் போன்றவற்றை சேகரித்து மொத்தமாக கடைகளில் விற்பனை செய்வது வழக்கம்.

அதன்படி நேற்று காலையில் சிலம்பரசன், அவருடைய மனைவி தங்கம்மாள் (35), உறவினர்களான தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி மாரியம்மாள் (60), முருகன் மகன் சதீஷ் (7) ஆகியோர் 3 சக்கர சைக்கிளில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரங்குடியை அடுத்த கீழ சண்முகபுரம் பகுதியில் சென்று பழைய பொருட்களை சேகரித்தனர்.

கார் மோதியது

பின்னர் சிலம்பரசன் உள்ளிட்ட 4 பேரும் 3 சக்கர சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் தூத்துக்குடி நோக்கி புறப்பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக 3 சக்கர சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் உருண்டு சாலையோரமாக தலைகுப்புற கவிழ்ந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் தங்கம்மாள், மாரியம்மாள், சிறுவன் சதீஷ் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 பேருக்கு தீவிர சிகிச்சை

மேலும் சிலம்பரசன் மற்றும் காரில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழிவிளையைச் சேர்ந்த செல்வராஜ் (55), அவருடைய மனைவி குமரி தங்கம் (49) மற்றும் காரை ஓட்டி வந்த அவருடைய மகன் ஜெனிட் (29) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூரங்குடி போலீசார் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். படுகாயமடைந்த சிலம்பரசன், செல்வராஜ் உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீசார் விசாரணை

இறந்த தங்கம்மாள், மாரியம்மாள், சதீஷ் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் காரில் வேளாங்கண்ணிக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

விளாத்திகுளம் அருகே 3 சக்கர சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments