கட்டுமாவடி ,மீமிசல் தொண்டி, வழியாக பட்டுக்கோட்டை - இராமநாதபுரம் இடையே புதிய ரயில் பாதை அமையுமா ?? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்



கட்டுமாவடி ,மீமிசல் தொண்டி, வழியாக பட்டுக்கோட்டை - இராமநாதபுரம் இடையே புதிய ரயில் பாதை அமையுமா?? சமூக வலைதளங்களில்  புகைப்படம் வைரலாகி வருகிறது.

வேலைவாய்ப்பு

வேலையில்லா திண்டாட்டம், வறுமை, வறட்சி, தொழில் வளர்ச்சியின்மை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தென்தமிழகத்தின் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலைவாய்ப்புகள் இல்லாததால் தென் மாவட்டங்களை சேர்ந்த குறிப்பாக ராமநாதபுரம் புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். மதுரைக்கு தெற்கே கன்னியாகுமரி உள்ளிட்ட ஒருசில பகுதிகள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள ரெயில்பாதைகள் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்டவையாகவே உள்ளன. 

இந்தநிலையில் சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து வாயிலாக தென்மாவட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் தூத்துக்குடி -‌காரைக்குடி இடையே ராமநாதபுரம் வழியாக புதிய ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை ரெயில்பாதை திட்டம் என அழைக்கப்பட்ட இந்த ரெயில்பாதை அமைக்க ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. 

ஆய்வு

இதன்படி ஆய்வு அறிக்கை கடந்த 2012-ம் ஆண்டு ரெயில்வே அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது. இதனால் புதிய ரெயில்பாதை திட்டம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்த நிலையில் காரைக்குடி-தூத்துக்குடி இடையில் வருவாய் சாத்தியக்கூறு 8.3 சதவீதம் வருவாய் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளதாக கூறி திட்டம் கைவிடப்பட்டது. 
 
இந்த புதிய ரெயில்பாதை அமைக்கப்பட்டால் பட்டுக்கோட்டை - இராமநாதபுரம் காரைக்குடி -தூத்துக்குடி இடையே  கட்டுமாவடி மணமேல்குடி மீமிசல் தொண்டி தேவகோட்டை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம், பகுதி மக்களும், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி பகுதி மக்களும் ரெயில்போக்குவரத்து வசதி பெறுவார்கள். மேலும், கூடங்குளம், நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா, ஐ.எஸ்.ஆர்.ஓ. திரவ இயக்க திட்ட மையம், தூத்துக்குடி துறைமுகம் உள்ளிட்டவைகளின் சரக்கு போக்குவரத்து இதுவரை சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை மார்க்கமாகவே நடைபெறுவதால் இந்த புதிய ரெயில்பாதையின் மூலம் ரெயில்களில் எளிதில் கொண்டு செல்ல முடியும். 

இதுபோன்ற கட்டமைப்பு வசதிகளால் தென்மாவட்டம் வளர்ச்சி பெறும் என்பதில் ஐயமில்லை. இதுபோன்ற காரணங்களை கருத்தில் கொண்டு புதிய ரெயில்பாதை திட்டத்தினை தேவையான நிதியை அடுத்தடுத்து ஒதுக்கீடு செய்து விரைந்து முழுமையாக முடிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments