புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில்`மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்கள் நடத்த உத்தேசம் கலெக்டர் மெர்சி ரம்யா தகவல்





 
புதுக்கோட்டையில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் 2,500 `மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மெர்சி ரம்யா கூறியுள்ளார்.

கலந்தாய்வு கூட்டம்

முதல் அமைச்சரின் முகவரித்துறை சார்பில், `மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்கள் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

முதல் அமைச்சரின் முகவரித்துறை சார்பில், `மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்கள் ஜூலை 11-ந் தேதி முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெறுவது குறித்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 

புதுக்கோட்டை
மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 66 இடங்களில் `மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

30 தினங்களுக்குள்...

இத்திட்டத்தில் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும், அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஊராட்சி அமைப்புகளில், வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகள் பெறப்படுகிறது. இம்முகாம்களில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் 30 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் வழங்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது.

இந்த `மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்கள், முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டன. நகர்ப்புற முகாம்களில் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசுதுறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு. அரசின் சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் `மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்கள் நடத்த ஆவன செய்யப்படுகிறது.

44 சேவைகள்

அதன் அடிப்படையில், மொத்தம் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில், 2,500 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, எரிசக்தித்துறை, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை (கலால்), தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட 15 அரசு துறை சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, உரிய வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யா தேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments