ஒரியூர் : பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் பணியிடை நீக்கம்





பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.20 ஆயிரம் லஞ்சம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா என்.மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 49). டெய்லர் . இவர் ஓரியூர் குரூப்பில் உள்ள இவருக்கு சொந்தமான இரண்டு நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து தரக்கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

இது தொடர்பாக ஓரியூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் மாதவன், கிராம உதவியாளர் காளீஸ்வரன் ஆகியோரிடம் பட்டா மாறுதல் தொடர்பாக பேசியுள்ளார். அப்போது அவர்கள் பட்டா மாறுதல் செய்து தருவதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டார்களாம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

 அதன் அடிப்படையில் அவர்களது ஆலோசனையின் படி நாகராஜனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை போலீசார் கொடுத்து அனுப்பினர். அதை நாகராஜன் வெள்ளையபுரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் தங்கி உள்ள அறை–யில் கொண்டு போய் கொடுத்துள்ளார்

பணியிடை நீக்கம்

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிக்கையின் அடிப்படையில் ஓரியூர் கிராம நிர்வாக அலுவலர் மாதவனை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரனும், கிராம உதவியாளர் காளீஸ்வரனை திருவாடானை தாசில்தார் கார்த்திகேயனும் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். பணியிடை நீக்கம் செய்த உத்தரவை வருவாய் துறையினர் கிராம நிர்வாக அலுவலர் மாதவன், கிராம உதவியாளர் காளீஸ்வரன் ஆகியோரிடம் வழங்கினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments