3500 சதுர அடி வரை வீடு கட்ட போறீங்களா? அப்போ அமைச்சர் முத்துசாமியின் முத்தான அறிவிப்பு






சென்னை: 3500 சதுர அடி வரை கட்டடங்களுக்கு இனி அனுமதி தேவையில்லை என அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். இதை அவர் சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவித்தார்.

தமிழக சட்டசபை துறை ரீதியிலான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்த கடந்த வியாழக்கிழமை கூடியது. அப்போது நேற்றைய தினம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை நடந்தது.

அதில் அமைச்சர் முத்துசாமி பேசுகையில் தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் 2 ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தில் 3,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு இனி கட்டட அனுமதி பெற தேவையில்லை என ஏற்கெனவே முதல்வர் அறிவித்துள்ளார்.

ஆனால் அவர்களுக்கு சுயசான்று மூலம் அனுமதி வழங்கப்படும். கட்டட அனுமதி தேவையில்லை என்றாலும் அவர்கள் கட்டட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். அது போல் 750 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் கட்டடங்கள் 8 சமையலறைக்குள் இருந்தால் அவர்களுக்கு கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என சொல்லப்பட்டு உள்ளது.

ஆனால் அவர்கள் அதற்காக விதிகளை மீறக் கூடாது. கட்டட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். 3500 சதுர அளவிலான கட்டடங்கள் கட்ட அனுமதி தேவையில்லை என்ற அறிவிப்பின்படி நில உரிமையாளர்கள் தரைதளம் அல்லது தரைதளத்துடன் முதல் தளம் வரையிலான கட்டடங்களுக்கு, உடனடி பதிவு அடிப்படையில், கட்டட அனுமதி பெற புதிய வசதி ஏற்படுத்தப்படும். இதன் வாயிலாக கட்டப்படும் கட்டடங்களுக்கு, கட்டட அனுமதி, பணி நிறைவு சான்று தேவையில்லை.

குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் வழியில், தமிழகத்தில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி, கட்டட விதிகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் விண்ணப்பங்கள், வரைபடங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில், அதிகாரிகளின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், மக்கள் வீடு கட்டும் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால், சாதாரண வீடு கட்டுவோர் அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருப்பதால் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும்.

இதைத் தொடர்ந்து அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளை புவியியல் தகவல் முறையில் கொண்டு மக்களுக்கு தனி இணைய செயலி உருவாக்கப்படும்.

நில உபயோக வகைப்பாடுகளை பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ள நிலப்பயன் தகவல் அமைப்பு உருவாக்கப்படும். 300 சதுர மீட்டருக்குள் கட்டிட பரப்பளவு கொண்ட 14 மீட்டர் உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டிடங்களுக்கும் கட்டிட முடிவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். வீட்டு வசதி வாரியத்தால் ஈரோட்டில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

திருவண்ணாமலை மற்றும் மதுரையில் 2 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். சென்னையில் புதிய வாகன நிறுத்த கொள்கை உருவாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments