கோடியக்கரையில் கடல் பசு பாதுகாப்பகம் அமைக்க நடவடிக்கை மீனவர்களிடையே விழிப்புணர்வு தீவிரம்




புதுக்கோட்டை மாவட்டம் கோடியக்கரையில் கடல் பசு பாதுகாப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மீனவர்களிடையே விழிப்புணர்வு தீவிரமாக ஏற்படுத்தப்படுகிறது.

கடல் பசு

கடல் வாழ் உயிரினங்களில் கடல் பசுவும் ஒன்று. பாலூட்டி வகையை சோ்ந்த கடல் பசு கடலுக்கு ராசா போன்றதாகும். கடலுக்கு அடியில் காணப்படும் தாவரங்கள், புற்கள், பாசிகளை உண்டு உயிர்வாழ்கின்றன. குறிபிட்ட நேரத்திற்கு ஒரு முறை கடல் நீரில் இருந்து மேற்பகுதிக்கு வந்து சுவாசித்து விட்டு கடலுக்குள் செல்லும்.

இந்த கடல் பசுகள் உயிரினம் அழிந்துவரக்கூடிய வகையில் உள்ளன. இதனால் கடல் பசுக்களை பாதுகாக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் பசு இனங்கள் காணப்படுகின்றன. இதில் பாக்ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களின் கடற்கரை பகுதிகளில் கடல் பசு அதிகம் உள்ளன.

விழிப்புணர்வு

இந்தியாவில் முதன் முறையாக கடல் பசு பாதுகாப்பகம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களின் கடலோர பகுதியில் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் கடல் பசு பாதுகாப்பகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடல் பசுக்களை பாதுகாப்பது தொடர்பாக மீனவர்களிடையேயும், மீனவகிராமங்கள், கடலோர பகுதிகளில் பொதுமக்களிடமும் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- கடல் பசு பாதுகாப்பகம் என்பது எப்படி அமைக்கப்படும் என்பது குறித்து இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. தற்போதைக்கு கடல் பசுக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கடல் பசுக்கள் கரை ஒதுக்கினால், கடலில் மீனவர்கள் வலையில் சிக்கினால் அதனை கடலில் விட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறை தண்டனை

மீனவர்கள் வலையில் கடல் பசு சிக்கும் போது அதனை பிடித்து கடலில் விடுவதை வீடியோவாக எடுத்து வனத்துறை, மீன்வளத்துறையினரிடம் காண்பித்தால் பரிசு வழங்கப்படும். மேலும் கடல் பசுவை பிடித்து பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

கடல் பசுக்கள் ஆழம்குறைந்த, வெயில் அதிகம் ஊடுருவக்கூடிய கடற்பகுதியில் அதிகம் வாழ்கின்றன. கடல் பசு உயிரினத்தால் கடலில் மற்ற மீன்களின் வளம் காணப்படுகிறது. கடல் பசு உண்டு வெளியிடும் எச்சங்களை தான் பிற மீன்கள், நண்டு, இறால் போன்றவை உண்டு வாழ்கின்றன. அதனால் கடல் பசுக்கள் அதிகம் இருந்தால் தான் கடலில் மீன்கள் அதிகம் காணப்படும். ஒரு கடல் பசுவின் ஆயுள்காலம் 70 ஆண்டு ஆகும்.

இவ்வாறு கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments