கறம்பக்குடியில் மளிகைக்கடை தீயில் எரிந்து நாசம் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்




கறம்பக்குடியில் மளிகை கடை தீப்பற்றி எரிந்ததில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் நாசமானது.

மளிகைக்கடையில் தீ

கறம்பக்குடி தென்னகர் யாதவர் தெருவில் வசிப்பவர் சண்முகசுந்தரம். இவர் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் மளிகைக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து கடையை பூட்டிவிட்டு அதே வளாகத்தில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலை 3 மணி அளவில் கடையின் உட்பகுதியில் இருந்து கரும் புகை வருவதாக சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உடனடியாக கடைக்கு சென்றபோது மளிகை கடையின் உட்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

பொருட்கள் சேதம்

இதையறிந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இ்டத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அந்த வணிக வளாகத்தில் உள்ள அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் கடையின் விற்பனை தொகை ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments