புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,602 வழக்குகளுக்கு சமரச தீர்வு




புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 1,602 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன.

தேசிய மக்கள் நீதிமன்றம்

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுபத்திராதேவி விசாரணை அமர்வுகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் குடும்ப நல மாவட்ட நீதிபதி ஜெயந்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தி, அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைபொருள் தடுப்பு நீதிமன்ற சிறப்பு மாவட்ட அமர்வு நீதிபதி பாபுலால், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பாலகிருஷ்ணன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பிச்சை, முதன்மை சார்பு நீதிபதி சசிகுமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி பூர்ணிமா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்- 1 மாஜிஸ்திரேட்டு விஸ்வநாதன், புதுக்கோட்டை மாவட்ட குற்ற வழக்கு எதிர்வாத சட்ட உதவி அமைப்பின் துணை தலைமை வழக்கறிஞர்கள் மதியழகன், அங்கவி உள்பட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

1,602 வழக்குகளுக்கு சமரச தீர்வு

புதுக்கோட்டை கோர்ட்டில் மொத்தம் 8 அமர்வுகளும், மாவட்டம் முழுவதும் 12 அமர்வுகளும் விசாரணைக்காக அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 4,773 வழக்குகள் பட்டியலிடப்பட்டது. இதில் 1,602 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.4 கோடியே 3 லட்சத்து 16 ஆயிரத்து 501 வரையிலான தொகைக்கு தீர்வு காணப்பட்டது. வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டதில் பயனாளி ஒருவருக்கு ஆணையை மாவட்ட முதன்மை நீதிபதி சுபத்திரா தேவி வழங்கினார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான ராஜேந்திரகண்ணன் செய்திருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments