புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை




புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை நடைபெற்றது.

பேரிடர் மீட்பு ஒத்திகை

சிப்காட் தீயணைப்புதுறை சார்பில் தென்மேற்கு பருவ மழையையொட்டி பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அன்னவாசல் அருகே திருவேங்கைவாசல் குளத்தில் நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கண்ணன் தலைமையில், வீரர்கள், மழை வெள்ளம், விபத்து பேரிடர் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்பது, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும் பொதுமக்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றின் பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

திருமயம், ஆவுடையார்கோவில்

திருமயம் தீயணைப்பு துறையினர் சார்பில் நிலைய அலுவலர் ராஜராஜ சோழன் தலைமையில், திருமயம் பைரவர் கோவில் மலையடிகுளத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் வீரர்கள் குளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது குறித்து செயல்விளக்கம் அளித்து செய்து காட்டினர். ஆவுடையார் கோவில் அருகே விளானூர் கிராமத்தில் உள்ள குளத்தில் ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலையம் சார்பில், பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நிலைய அலுவலர் சந்திரசேகர் தலைமையில் வீரர்கள் செய்து காண்பித்தனர்.

கோட்டைப்பட்டினம்

ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில், பேரிடர் காலங்களில் ஆபத்துகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை எவ்வாறு மீட்பது மற்றும் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை மீமிசல் தெப்பக்குளத்தில் நடைபெற்றது. இதில் வீரர்கள் ரப்பர் படகு மூலம் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்றுவது குறித்து பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகர் செய்திருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments