கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு மாணவர்களுக்கு ஆதார் முகாம், வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு




கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் முகாம் மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.

பள்ளிகள் நாளை திறப்பு

தமிழகத்தில் பள்ளிகளில் பொதுத்தேர்வு, ஆண்டு தேர்வு முடிவடைந்ததும் கோடை கால விடுமுறை விடப்பட்டன. இதையடுத்து பள்ளிகள் ஜூன் மாத தொடக்கத்தில் திறக்கப்பட இருந்த நிலையில் வெப்ப தாக்குதல் காரணமாக பள்ளிகள் ஜூன் மாதம் 10-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், உபகரணங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆதார் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,960 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் அனைத்தும் நாளை திறக்கப்பட உள்ளது. பள்ளிகளில் வகுப்பறைகள், வளாகப்பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் சிறப்பு முகாம் மற்றும் வங்கி கணக்கு தொடங்க தபால் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லாவிட்டால், ஆதார் பதிவு மேற்கொள்ளுதல், புதுப்பித்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும். இதேபோல வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு தபால் வங்கி கணக்கு தொடங்கப்படும். இந்த பணிகளை குறிப்பிட்ட நாட்கள் மேற்கொள்ள உள்ளனர்.

எழுதுபொருட்கள்

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பையொட்டி மாணவ-மாணவிகளுக்கு தேவையான தண்ணீர் பாட்டில், உபகரணங்கள், பொருட்கள், புத்தக பைகள், காலணிகள் உள்ளிட்டவை புதியதாக கடைகளில் பெற்றோர் வாங்கி வருகின்றனர்.

இதனால் எழுதுபொருட்கள் மற்றும் காலணி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments