புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்




புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாமை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்.

ஆதார் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் எண் புதிய பதிவுகள் மற்றும் புதுப்பித்தல் பணிக்கான முகாம் நேற்று முதல் தொடங்கியது. ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முகாமை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- எல்காட் நிறுவனம் மூலம் 19 இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று தயார் நிலையில் உள்ளனர். மேலும் 19 பள்ளி மையங்களிலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் முதலிலும், பின்னர் குறைவாக உள்ள பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இலவசம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் முற்றிலும் இலவசமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோன்று தனியார் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பயிலும் 6 மற்றும் 7 வயதுடைய குழந்தைகளுக்கும், 16 மற்றும் 17 வயதுடைய குழந்தைகளுக்கும் இச்சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற மாணவர்களுக்கு ஆதார் நிறுவனம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி தனியார் பள்ளி மாணவர்கள் (8 வயது முதல் 15 வயது வரை) பெற்றுக் கொள்ளலாம்.

2 லட்சம் மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில், 40,145 மாணவர்களுக்கு புதிய ஆதார் எண் பதிவுகளும் மற்றும் 2,05,136 மாணவர்களுக்கு ஆதார் எண் புதுப்பித்தல் பணியும் நடைபெற உள்ளது. இதன் மூலம் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 2,45,281 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (இடைநிலை), ராஜேஸ்வரி (அறந்தாங்கி), செந்தில் (தொடக்கக்கல்வி) உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments