ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து ஏரி, குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு




இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து ஏரி, குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுக்க விவசாயிகள், மண்பாண்டம் செய்வோருக்கு அனுமதி அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வண்டல் மண் எடுக்க அனுமதி

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்யவும் மண், வண்டல் மண், களிமண் எடுக்க மாவட்ட கலெக்டர்கள் மூலம் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் நல்ல மழைப்பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்த நிலையில், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்களால் மண் எடுக்க முடியவில்லை. தற்போது நீர் நிலைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், அவற்றை தூர்வாரி, கொள்ளளவை உயர்த்தினால், வரும் மழைக்காலத்தில் அதிக அளவு மழை நீரை சேமிக்கமுடியும்.

புதிய அறிவிப்பு

இதற்கிடையே விவசாய பயன்பாட்டிற்காக மண் எடுக்க விவசாயிகளிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. எனவே தற்போதுள்ள விதிகளின்படி, விவசாய பயன்பாட்டிற்கும், பானைத் தொழில் செய்வதற்கும் அதே கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமப் பகுதியிலோ உள்ள நீர்நிலைகளில் இருந்து மட்டுமே மண் எடுக்க முடியும். மேலும் இந்த அனுமதி பெற சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று, மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று மண் எடுக்க வேண்டும்.

இந்த நிலையில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் வழங்கும் இந்த திட்டத்தை எளிமைப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி சிறுகனிம விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன்படி மண் எடுப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பம்

அதன்படி பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களில் இருந்து கட்டணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் எடுக்க சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் இணைய வழியில் அனுமதி வழங்கப்படும். மேலும் விவசாயிகள் தாங்கள் வசிக்கும் தாலுக்காவில் உள்ள எந்த ஒரு நீர்நிலையிலும் தேவைப்படும் மண்ணை எடுத்துக் கொள்ளலாம்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பால், விவசாயிகள் பயன்பெறுவதோடு, மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை உயர்த்தி அதிக மழைநீரைச் சேமித்திட வழிபிறக்கும்.

விவசாயிகள் விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரி அந்ததந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வெளியிடப்படும். விவசாயிகள் அதில் விண்ணப்பம் செய்தால் உடனடி அனுமதி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments