நடப்பு கல்வியாண்டில் இருந்து கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை




கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கும் முடிவை பல்கலைக்கழக மானியக்குழு எடுத்துள்ளதாக அதன் தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை

பல்கலைக்கழக மானியக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன், திறந்த மற்றும் தொலைதூர கற்றல் முறைகளில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கான அனுமதி கடந்த ஆண்டு (2023) ஜூலை மாதம் நடந்த பல்கலைக்கழக மானியக்குழுவின் 571-வது கூட்டத்தில் வழங்கப்பட்டது.

இதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு, ஆர்வம் இருந்ததை கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு ஒரு முறை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த உயர்கல்வி நிறுவனங்களின் வழக்கமான நேரடி படிப்பு திட்டங்களுக்கும், ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கும் முடிவை பல்கலைக்கழக மானியக்குழு எடுத்து இருக்கிறது.

அதன்படி, ‘நடப்பு கல்வியாண்டில் (2024-25) இருந்து ஜூலை-ஆகஸ்டு மாதங்களிலும், ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலும் என ஆண்டுக்கு 2 முறை உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை நடத்தி கொள்ளலாம்' என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.

உலக பல்கலைக்கழகங்கள்...

மேலும், ‘வாரியத் தேர்வு முடிவுகள் தாமதம், உடல்நலப் பிரச்சினைகள், தனிப்பட்ட காரணங்களால் கல்வியாண்டின் ஜூலை-ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் சேர முடியாமல் போனவர்களுக்கு, ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை என்பது பலன் அளிக்கும்.

சேர்க்கையில் தவறும் மாணவர்கள் ஓராண்டு காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படாது. அவர்களின் உத்வேகத்தையும் தற்காத்துக்கொள்ள உதவும். தொழில் நிறுவனங்களும் தங்களுடைய வளாக நேர்காணலை ஆண்டுக்கு 2 முறை நடத்தி, வேலைவாய்ப்பையும் மேம்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் இதுபோல் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கையைதான் பின்பற்றுகின்றன எனவும், இதே முறையை இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்றினால், உலக பல்கலைக்கழகங்களின் சர்வதேச ஒத்துழைப்பையும், மாணவர் பரிமாற்றத்தையும் மேம்படுத்த முடியும். இதன் மூலம் உலகளாவிய கல்வித்தரங்களுடன் இணைவதோடு, போட்டித்தன்மையும் மேம்படும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்தார்.

கட்டாயம் இல்லை

ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை என்ற நடைமுறையை பல்கலைக்கழகங்கள் பின்பற்றுவது என்பது கட்டாயம் இல்லை என்றும், தேவையான உள்கட்டமைப்பு மற்றும் கற்பித்தலுக்கான ஆசிரியர்களை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், வளர்ந்து வரும் பகுதிகளில் புதிய பாடத்திட்டங்களை வழங்குவதற்கும் இந்த நடைமுறை நெகிழ்வுத் தன்மையுள்ளதாக இருக்கும் என்றும், அவ்வாறு ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கையை பின்பற்ற விரும்பும் உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவன விதிமுறைகளில் பொருத்தமான திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments