தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை- ரூ.1 கோடி அபராதம் மத்திய அரசின் புதிய சட்டம் அமலுக்கு வந்தது




தேர்வுகளில் முறைகேடு செய்தால் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் மத்திய அரசின் புதிய சட்டம் அமலுக்கு வந்தது.

நீட் தேர்வு முறைகேடு

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடுகள் தற்போது வெட்டவெளிச்சமாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான விசாரணைகளில் வினாத்தாள் கசிந்தது தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் பலர் கைது ஆனார்கள். இதற்கிடையே இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. கருணை மதிப்பெண்கள் பெற்ற சுமார் 1,500 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.

இதேபோல் கடந்த 18-ந் தேதி நடந்த பல்கலைக்கழக பேராசியர் பணிக்கான நெட் தேர்விலும் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த தேர்வும் ரத்து செய்யப்படுவதாக மறுநாளே அறிவிக்கப்பட்டது. அதேபோல் மற்றொரு தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அமலுக்கு வந்த புதிய சட்டம்

இதுபோன்ற தேர்வு முறைகேடுகளை தடுக்க வகை செய்யும் புதிய சட்டம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் அரசு தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டம்-2024 என அழைக்கப்படுகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்பதலைப் பெற்றது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி, பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி., ரெயில்வே ஆள்சேர்ப்பு வாரியம், தேசிய தேர்வு முகமை, வங்கித் தேர்வுகள் உள்பட மத்திய அரசின் பல்வேறு துறைகள் நடத்தும் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வகை செய்யும் வகையில் இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டு சிறை

இதன்படி வினாத்தாள்களை கசிய விடுவது, தேர்வின்போது தகவல் தொடர்புகள் மூலம் தேர்வர்களுக்கு உதவுவது, கம்ப்யூட்டர் அமைப்புகளை சீர்குலைப்பது, ஆள் மாறாட்டம் செய்வது, போலி ஆவணங்களை உருவாக்குவது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது இந்த சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்ய முடியும். மேலும் அனுமதி இல்லாத நபர்கள் தேர்வு மையத்துக்குள் நுழைவதையும் இந்த சட்டம் தடுக்கிறது.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.

தவறுகள் நடந்தும் அதை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தேர்வை நடத்துபவர்களுக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

ஜாமீன்பெற முடியாது

குற்றங்களுக்கான தண்டனையைப் பொறுத்தவரை தேர்வு நடத்தும் அதிகாரிகள், பிற சேவையாளர்கள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள் என ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. குற்றம் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை பாயும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டால் ஜாமீனில் வெளியே வர முடியாது. குற்றம் செய்தவர்களை எந்த பிடிவாரண்டும் இன்றி போலீஸ் அதிகாரிகள் கைது செய்ய முடியும். அதே நேரம் தெரியாமல் குற்றம் இழைக்கப்பட்டதை நிரூபிப்பவர்களை பாதுகாக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments