உஷாரய்யா உஷாரு: கூரியர் மூலம் நடக்கும் நூதன மோசடி..!தற்போது இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் போலி கூரியர் மோசடி அதிகரித்து வருகிறது. போலி கூரியர் மோசடி என்றால், நீங்கள் யாருக்கும் எந்தவிதமான கூரியரும் அனுப்பியிருக்க மாட்டீர்கள். ஆனால் உங்களது பெயரில் ஒரு கூரியர் அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதில் சட்டவிரோத பொருட்கள் இருந்ததாகவும் நாடகமாடி மோசடிக் காரர்கள் உங்களிடம் பணம் பறிக்க முயல்வார்கள்.

உதாரணமாக இந்த மோசடியானது எப்படி நடக்கின்றது என்றால், முதலில் உங்களை தொலைபேசியில் அழைப்பார்கள். அதில் நாங்கள் கூரியர் நிறுவனத்திலிருந்து தொடர்பு கொள்கிறோம். உங்கள் பெயரில் ஒரு கூரியர் சென்னையிலிருந்து மும்பைக்குச் செல்கிறது. அதில் சட்டவிரோத பொருட்கள் இருக்கின்றது. எனவே நாங்கள் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறுவார்கள்.

நீங்கள் அதனை மறுப்பீர்கள். அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல், அந்த அழைப்பில் காவல்துறை அதிகாரியை இணைப்பதாகக் கூறி ஒரு போலி அதிகாரியை இணைப்பார்கள். நீங்கள் அவரிடம் முறையீடு செய்வீர்கள். அதற்கு அந்த போலி அதிகாரி நான் அந்த கூரியருடன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டையை வைத்து விசாரணை செய்யவேண்டும். வீடியோ கால் அல்லது ஸ்கைப்-ல் இணையலாம் என்று அழைப்பார். அந்த ஸ்கைப் அழைப்பிலும் அவர்கள் உண்மையான அதிகாரியைப்போல் தோற்றம் அளிப்பார்கள். நீங்கள் அதை ஏற்று ஸ்கைப் அழைப்பிற்குப் போன பின்னர், உங்களின் முகத்தோற்றமும் இந்த ஆதார் அட்டையில் உள்ள முகத்தோற்றமும் ஒன்றாக இருக்கின்றன. எனவே நீங்கள் தான் இச்செயலைச் செய்தீர்கள் என்று உங்கள் மேல் குற்றம் பழிசுமத்தி கைது செய்ய வருகிறோம் என்று உங்களைப் பயப்படவும், பதற்றம் அடையவும் செய்வார்கள்.

பின்னர், போலி அதிகாரி இந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என்றும், கூறினால் உங்களுக்கு ஆபத்து என்றும் கூறுவார். மேலும் நாங்கள் கூறும் தொகையை நீங்கள் செலுத்தினால் இந்த குற்றச்செயலில் இருந்து உங்களை விடுவிக்க செய்கிறோம் என்று கூறுவார்கள். நீங்களும் அதிலிருந்து விடுபட்டால் போதும் என்று அவர்கள் கேட்கும் தொகையை அனுப்பி ஏமாந்துவிடுவீர்கள். எனவே இதுபோன்ற மோசடியில் இருந்து எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.

உங்கள் ஆன்லைன் வங்கி, சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல் கணக்குகள் போன்றவற்றை வலுவான கடவுச்சொற்களால் பாதுகாக்கவும். தெரியாத நபர்களுக்கு தொலைபேசி அழைப்பு மூலம் ஓ.டி.பி.களைப் பகிர வேண்டாம். மேலும் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது சைபர் குற்றங்கள் நடந்தால், உடனடியாக 1930-ஐ தொடர்புகொண்டு தெளிவுபடுத்தவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments