அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு: வாலிபரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு




அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பலியான வாலிபரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

அறந்தாங்கி அருகே செவிடங்காடு கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவருடைய மகன் விஜய் ஆனந்த் (வயது 28), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இடையன்காடு கிராமத்தை சேர்ந்த சுல்தான் என்பவருடைய வீட்டின் கட்டுமான பணிக்கு சென்றார். அங்கு விஜய் ஆனந்த் கடப்பாரையால் பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது தரைப்பகுதி வழியாக சென்ற மின்சார ஒயரில் கடப்பாரைபட்டது.

இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட விஜய் ஆனந்தை சக தொழிலாளர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஆனந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சாலை மறியல்

இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின்சாரம் பாய்ந்து இறந்த வாலிபரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் விஜய் ஆனந்த் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 150-க்கும் மேற்பட்டோர் அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பாக பட்டுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம், அறந்தாங்கி தாசில்தார் திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments