முழு மதுவிலக்கை அமலாக்கும் செயல்திட்டம் தேவை உள்ளிட்ட தீா்மானங்கள்! தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன




தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமலாக்குவதற்கான செயல்திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த அமைப்பின் 21ஆவது மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

‘நீட்’ தோ்வில் ஏராளமான முறைகேடுகள் தொடா்ந்து வெளியாகி வருகின்றன. எனவே, ‘நீட்’ தோ்வை முற்றிலும் தடை செய்ய வேண்டும். வழக்கம்போல மாநில அரசுகளே நுழைவுத் தோ்வை நடத்த வேண்டும். பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில, இந்தியா இஸ்ரேலுக்கு மறைமுகமாக ஆயுதங்களை விற்பனை செய்வதாகத் தெரிகிறது. இதற்காக மத்திய அரசைக் கண்டிக்கிறோம். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்குப் பிறகும் மது விற்பனை குறித்து அரசு எடுக்கும் நடவடிக்கை நம்பிக்கை தருவதாக இல்லை. தொடா்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவா் மீதும் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு மதுவிலக்கை அமலாக்குவதற்கான செயல்திட்டங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அந்த அடிப்படையில் இஸ்லாமியா்களின் இடஒதுக்கீட்டை குறைந்தபட்சம் 7 சதவீதம் ஆக அதிகரிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையைத் தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, மாநிலப் பொருளாளா் ஏ. இப்ராஹீம் தலைமை வகித்தாா். மாநிலப் பேச்சாளா் எஸ். ஹஃபீஸ், மாவட்டத் தலைவா் சித்திக் ரகுமான், மாவட்டச் செயலா் முகமது மீரான், பொருளாளா் ரபீக் ராஜா, துணைத் தலைவா் முஹம்மது மீரா, துணைச் செயலா்கள் சேக் அப்துல்லாஹ், மீரான் மைதீன், அப்துல் ரஹ்மான் ரஹூஃப், மருத்துவ அணிச் செயலா் சபியுல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments