லாந்தையில் ரூ.17 கோடியில் மேம்பாலம்: சுரங்கப்பாதை பணிக்கு கிராம மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கோட்ட ரெயில்வே மேலாளர் வேண்டுகோள்




லாந்தையில் ரூ.17 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. சுரங்கப்பாதை பணிக்கு கிராம மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோட்ட ரெயில்வே மேலாளர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ரூ.17 கோடியில் ரெயில்வே மேம்பாலம்

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி அருகே லாந்தை கிராமத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.17 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்துக்கு அருகே சுரங்கப்பாதை பணிகள் நடந்து வந்தது.

அதாவது, மானாமதுரை-ராமேசுவரம் பிரிவில் சத்திரக்குடி-ராமநாதபுரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் விபத்துகளை தவிர்க்க கடந்த 2016-ம் ஆண்டு லாந்தை கிராமம் அருகே சுரங்கப்பாதை அமைக்க கோட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இந்த சுரங்கப்பாதை 4.5 மீட்டர் அகலமும், 3.6 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைக்கப்பட இருந்தது.

கிராம மக்கள் போராட்டம்

தொடர்ந்து, சுரங்கப்பாதைக்கான சதுர கான்கிரீட் தூண்கள் 2019-ம் ஆண்டு பொருத்தப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இணைப்பு சாலையும் அமைக்கப்பட்டது. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் முடிந்த நிலையில், சுரங்கப்பாதையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதேசமயத்தில், சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகள் முடிந்தன. இருப்பினும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக, சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற தேவையான குழாய்கள் பதிப்பது, லாந்தை கிராம பகுதியில் இணைப்பு சாலை, சுற்றுச்சுவர் கட்டுதல், இணைப்புச்சாலை ஓரங்களில் சிறிய அளவிலான மழைநீர் வடிகால் அமைப்பது, மழைநீர் சேகரிப்பு கிணறு அமைப்பது, தண்ணீரை ரெயில்வே பாலத்திற்கு கொண்டு செல்வது, சுரங்கப்பாதை முகப்பு பகுதியில் மேற்கூரை அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடக்க உள்ளன. இந்த பணிகளை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா நேரில் ஆய்வு செய்தார்.

மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

இதுகுறித்து அவர் கூறும்போது, சுரங்கப்பாதை பணிக்காக ரூ.1 கோடியே 73 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இது தவிர மழைக்கால தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இருப்பினும், ரெயில்வே சார்பில் ரூ.17 கோடி செலவில் மேம்பாலமும் கட்டப்பட உள்ளது. ரெயில்வே மேம்பாலத்துடன் கூடுதலாக சுரங்கப்பாதை பணிகளும் முடிந்தால் மழைக்காலத்தில் கிராம மக்கள் சிரமமின்றி ரெயில் பாதையை கடந்து செல்ல முடியும். எனவே, சுரங்கப்பாதைப் பணிகளை விரைவில் முடிப்பதற்கான ஒத்துழைப்பை லாந்தை கிராம மக்கள் வழங்க வேண்டும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments