பாகிஸ்தானில் பரபரப்பு தரையிறங்கும் போது விமானத்தில் தீப்பிடித்தது 297 பேர் உயிர் தப்பினர்




பாகிஸ்தானில் தரையிறங்கும் போது விமானத்தில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 297 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விமானத்தில் திடீர் தீ

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு சவுதி ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 276 பயணிகளும், விமான ஊழியர்கள் 21 பேரும் பயணித்தனர்.

இந்த விமானம் பெஷாவர் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் டயர்களில் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் புகை கிளம்பியது.

அவசரகால வழி மூலம்

இது குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து விமானம் உடனடியாக ஒடுபாதைக்கு அருகில் உள்ள புல்வெளியில் நிறுத்தப்பட்டது.

விமானத்தில் தீப்பற்றிய தகவல் தெரிந்ததும் பயணிகள் மத்தியில் பெரும் பீதி உருவானது. அவர்கள் பயத்தில் அலறி துடித்தனர். இதனையடுத்து விமானத்தில் இருந்த ஊழியர்கள் விமானத்தின் அவசரகால வழி மூலம் பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.

297 பேர் உயிர் தப்பினர்

அதன்படி பெரும் பதற்றத்துக்கு மத்தியில் பயணிகள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். சற்று நேரத்துக்குள்ளாக விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் தீப்பற்றியது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதன் மூலம் விமானத்தில் இருந்த 297 பேரும் காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பினர்.

வீடியோ வைரல்

சம்பந்தப்பட்ட விமானம் முழுமையான தொழில்நுட்ப சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளதாவும் சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே தீப்பற்றிய விமானத்தின் அவசரகால வழி மூலம் பணிகள் பதற்றத்துடன் வெளியே வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments