கருவேப்பிள்ளையான், திருவப்பூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் துரை.வைகோ எம்.பி. உறுதி




திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பாக தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரை.வைகோ எம்.பி. புதுக்கோட்டையில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட் அருகில் இருந்து தொடங்கி வீதி வீதியாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றார். அவருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

அப்போது அமைச்சர் ரகுபதி கூறுகையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி அதிக இடங்களை பெற்றுள்ளது. இதுதவிர தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும் விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது எதிர்க்கட்சி அதிகளவில் உள்ளதால் தேவையான திட்டங்களை பெறமுடியும். அந்த வகையில் துரை.வைகோ எம்.பி. மக்களுக்கு தேவையான திட்டங்களை பெற்று தருவார், என்றார்.

இதையடுத்து, துரை.வைகோ எம்.பி. கூறுகையில், என்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நிச்சயம் பல நல்ல திட்டங்களை பெற்றுத்தருவேன். புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கருவேப்பிள்ளையான் ரெயில்வே கேட் மற்றும் திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதிகளில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். நாடாளுமன்றத்தில் எனது முதல் கன்னிப்பேச்சில் காவிரி- வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்தவும், பல திட்டங்களை கொண்டுவருவது குறித்தும் பேசினேன். நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தபடி எனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கும், ஓட்டுப்போடாத மக்களுக்கும் நான் பணியாற்றுவேன், என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments