புதுக்கோட்டையில் சாலையில் கிடந்த பையில் 97 நட்சத்திர ஆமைகள் போலீசார் கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைப்பு




புதுக்கோட்டையில் சாலையில் கிடந்த பையில் 97 நட்சத்திர ஆமைகளை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நட்சத்திர ஆமைகள்

புதுக்கோட்டையில் சாந்தநாதபுரம் பகுதியில் சாலையில் நேற்று காலை ஒரு பை கேட்பாரற்று கிடந்தது. அந்த பை நகர்ந்தப்படி, நெளிந்து கொண்டே இருந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அந்த பையை திறந்து சோதனையிட்டபோது அதனுள் சிறிய அளவில் துணிகளான பைகள் முடிச்சு போட்டு கிடந்தன. அந்த பைகளும் நெளிந்தப்படி இருந்தன. இதனால் போலீசாரும் சற்று உஷாராகினர். அந்த பைகளுக்குள் வன உயிரினங்கள் எதுவும் இருக்குமோ? என சற்று அச்சமடைந்தனர். அதன்பின் அந்த பைகளை திறந்து பார்த்தபோது அதில் நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரியவந்தது. அவை அனைத்தும் உயிருடன் இருந்தன.

வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

இதையடுத்து அந்த பையை போலீசார் கைப்பற்றி அதில் இருந்த நட்சத்திர ஆமைகளை எண்ணினர். இதில் மொத்தம் 97 நட்சத்திர ஆமைகள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த நட்சத்திர ஆமைகள் மருத்துவ குணம் கொண்டவையாகும். மருந்து தயாரிக்கவும் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

நட்சத்திர ஆமைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நட்சத்திர ஆமைகளை கடத்தி செல்வதற்காக மர்மநபர்கள் யாரேனும் பையில் வைத்து கொண்டு வந்தார்களா? சாலையில் அந்த பை விழுந்து கிடந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு வருகின்றனர்.

பல லட்ச ரூபாய் மதிப்பு

கைப்பற்றப்பட்ட நட்சத்திர ஆமைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. எங்கிருந்து அவை கொண்டு வரப்பட்டன என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். நட்சத்திர ஆமைகளை கோர்ட்டில் ஒப்படைத்து அதன்பின் வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments