பட்டுக்கோட்டை- பேராவூரணி தொகுதிகளில் ரெயில்வே பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் முரசொலி எம்.பி. உறுதி




பட்டுக்கோட்டை- பேராவூரணி தொகுதிகளில் ரெயில்வே பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று முரசொலி எம்.பி. கூறினார்.

ஆய்வுப்பணி

பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்துக்கு நேற்று திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அன்பழகன் மற்றும் திருச்சி கோட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு பணிக்கு வந்தனர். அதிகாாிகளை தஞ்சை முரசொலி எம்.பி., அண்ணாதுரை எம்.எல்.ஏ. , நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் வேதரத்தினம் ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஜெயராமன் மற்றும் பலர் வரவேற்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

வளர்ச்சி பணிகள்

அப்போது பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்துக்கு தேவையான கழிவறை வசதி, குடிநீர் வசதி மேம்படுத்தப்படும் என்றும் திருவாரூர்-காரைக்குடி வழி ரெயில் தடத்தில் மின் மயமாக்கும் பணி திருவாரூரில் இருந்து தொடங்கப்பட்டு உள்ளதாக ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் கூறினார். ஆய்வின் போது முரசொலி எம்.பி. கூறியதாவது:-

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நானும் ரெயில்வே கோட்ட மேலாளரும் இங்கு வந்துள்ளோம். மக்கள் பிரதிநிதிகளான நாங்கள் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் என அனைவரும் இந்த பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தை எப்படி விரிவுபடுத்தலாம், எந்தெந்த வசதிகள் கொண்டு வரலாம். பேராவூரணி ரெயில் நிலையத்தில் எந்த வளர்ச்சி பணிகளை செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறோம்.

கம்பன் எக்ஸ்பிரஸ்

தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரெயிலை அதிராம்பட்டினம், பேராவூரணி ரெயில் நிலையங்களில் நிறுத்தி இயக்க வலியுறுத்தி ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை வைத்து இருக்கிறேன். ரெயில்வே வாரியத்தலைவர், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். இதே கோரிக்கையை ரெயில்வே கோட்ட மேலாளரிடம் கொடுத்து இருக்கிறோம்.

கம்பன் எக்ஸ்பிரஸ் பட்டுக்கோட்டை, பேராவூரணி மக்களுடைய கோரிக்கை. கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரத்தில் எல்லா நாட்களும் இயக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் ரெயில்வே திட்டப் பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு முரசொலி எம்.பி. கூறினார்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments