2,500 சதுர அடி அளவுள்ள மனையில் 3,500 சதுர அடியில் வீடு கட்ட ஆன்லைன் மூலம் உடனடி அனுமதி பெறும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதனால் சான்றிதழ் பெற மக்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்ல தேவையில்லை.
புதிதாக வீடு கட்டுபவர்கள், கட்டிட அனுமதி பெற பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது.
இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பட்ஜெட்டில் அறிவிப்பு
இதனையடுத்து தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘சுயசான்றிதழ் மூலமாக பொதுமக்கள் கட்டிட அனுமதி பெறுவதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2,500 சதுரஅடி வரையுள்ள மனைப்பகுதியில், 3,500 சதுரஅடி கட்டிடப் பரப்பளவிற்குள் தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல்தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்கு உட்பட்டு குடியிருப்பு கட்டிடத்தைக் கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதியை எளிதாகவும், உடனடியாகவும் பெற முடியும். சுயசான்றிதழ் திட்டம் என்பது பொதுமக்கள் கட்டிட அனுமதிக்காக அலுவலகங்களுக்கு சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து, அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டிட விதிகளை எளிமைப்படுத்தியும் மக்கள் கடைப்பிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.
தற்போதுள்ள ஒற்றைச்சாளர முறையின் மூலம் ஒப்புதல் பெறுவதை காட்டிலும், இந்த சுயசான்றிதழ் திட்டத்தில் ஒப்புதல் பெறும் நடைமுறை மிகவும் எளிதான வகையில் அமைந்து, பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இதுதொடர்பாக, ஒற்றைச்சாளர முறையில் சுயசான்றிதழ் திட்டத்திற்கான மென்பொருள் தொகுப்பு உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
சலுகைகள்
தற்போது குடியிருப்பு கட்டிடங்களுக்கான கட்டிட அனுமதி பெறுவதற்காக பெறப்படும் மொத்த விண்ணப்பங்களில், 72 சதவீத ஊராட்சிகளிடம் இருந்தும், 77 சதவீத பேரூராட்சிகளிடம் இருந்தும், 79 சதவீத நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிடம் இருந்தும் பெறப்படுகின்றன. அந்த விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச்சாளர முறையில் பரிசீலனை செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இப்புதிய திட்டத்தின் கீழ் அனுமதி பெறும் கட்டிடங்களுக்கும், சாலைக்கும் இடையில் தளர்வு (1.5 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது), கூராய்வுக் கட்டணம் (சதுர மீட்டருக்கு ரூ.2), உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான (ஐ மற்றும் ஏ) கட்டணங்கள் (சதுர மீட்டருக்கு ரூ.375) ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தேவையான கட்டணங்களை செலுத்தியபின் ‘கியூ.ஆர். கோடு’டன் கட்டிட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், முன் இடக்கள ஆய்வு மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உடனடியாக கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கும் வழிவகை செய்து, கட்டிட முடிவுச்சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்
தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் இணையதளம் வாயிலாக சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனைப்பகுதியில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாக ஒற்றைச்சாளர முறையில் கட்டிட அனுமதிகளை வழங்கும் ஒருங்கிணைந்த திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்து, 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு இயக்குனர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லட்சக்கணக்கான மக்கள் பயன்
பின்னர் அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி வருமாறு:-
மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது? அதை எப்படி தீர்வு செய்வது? என்று ஆய்வு செய்து பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 3,500 சதுரஅடி கட்டிடம் கட்டுவதற்கு அனுமதிக்காக மனுபோட்டு காலதாமதம் ஏற்படுவதால், பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது, இதுபோல் பல மனுக்கள் வருவதால் அதிகாரிகளுக்கும் வேலை அதிகமாக இருக்கிறது. அதையெல்லாம் உணர்ந்துதான் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
உரிய அனுமதியின்படி வீடுகள் கட்டி தரப்படுகிறதா? ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதை அவரவரே பார்த்து, ஆன்லைனில் மனுவை அளித்துவிட்டு அவர்களே கட்டிக்கொள்ளலாம் என்பதுதான் இந்த திட்டம். இது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த திட்டத்தால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள்.
தீர்வு அளிக்கப்படாத மனுக்களுக்கு காரணம் என்ன? என்பதை கண்காணித்து உடனடியாக செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.