மும்பை-ஆமதாபாத் இடையே அமைக்கப்பட்டு வரும் புல்லட் ரெயில் பாதைக்காக கடலுக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்




மும்பை-ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்காக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடங்கி உள்ளது.

கடலுக்கு அடியில் சுரங்கம்

மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. ரூ.1.08 லட்சம் கோடி செலவில் உருவாகி வரும் புல்லட் ரெயில் திட்டம், பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் ஆகும். ஆரம்பத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டப்பணிகள் மந்தமாக நடந்து வந்தது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி 100 சதவீதம் முடிவடைந்து, புல்லட் ரெயில் திட்டப்பணிகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

புல்லட் ரெயில் திட்டத்துக்காக நாட்டிலேயே முதல் முறையாக மும்பை அருகே உள்ள தானேயில் 7 கி.மீ. தூரத்தில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை தேசிய அதிவிரைவு ரெயில் கழகம் தொடங்கி உள்ளது. தானே கழிமுகப்பகுதியில் இருந்து ஷீல்பாட்டா வரை சுரங்கப்பாதை அமைகிறது.

ஒரு நாளுக்கு 4 முறை வெடி வைத்து தகர்ப்பு

கடலில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி குறித்து தேசிய அதிவிரைவு ரெயில் கழக என்ஜினீயர் ஒருவர் கூறுகையில், "தானே கழிமுகத்துக்கு அடியில் 25-30 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டப்படுகிறது. அருகில் கட்டிடங்கள் உள்ளிட்டவை இருப்பதால் சுரங்கம் தோண்டும் பணியை என்.ஏ.டி.எம். (நியூ ஆஸ்ட்ரியன் டுயுனலிங் மெத்தடு) முறையில் மிகவும் கவனமாக மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது 2 வழிப்பாதைகளிலும் ஒற்றை உருளை (சிங்கிள் டியூப்) முறையிலான சுரங்கத்தை தோண்டி வருகிறோம். ஒருநாளில் 4 முறை மட்டுமே சுரங்கம் தோண்ட வெடி வைக்கப்படுகிறது. ஜப்பானில் இருந்து வந்த எந்திரங்களை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 180 முதல் 200 மீட்டர் தூரத்துக்கு 2 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டுகிறோம்.

டிசம்பருக்குள் பணி முடியும்

மற்றொரு அதிகாரி கூறுகையில், "2 ராட்சத மோட்டார் மூலம் ரப்பர் டியூப் வழியாக சுத்தமான காற்று சுரங்கத்துக்குள் அனுப்பப்படுகிறது. இது 2 ஷிப்டுகளாக பணியில் ஈடுபடும் 150 தொழிலாளர்களுக்கு பயன் உள்ளதாக உள்ளது. சுரங்கப்பணிக்காக வெடி வைத்த பிறகு சுரங்கத்துக்கு சுத்தமான காற்று செலுத்தப்படுகிறது. வெடி வைத்த பின்னர் நிபுணர்கள் உள்ளே சென்று சுரங்கத்தை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்த பிறகு தான் மீண்டும் தொழிலாளர்கள் உள்ளே செல்வார்கள். சுரங்கம் தோண்டும் போது வரும் பாறைகள், மண் ஜே.சி.பி. எந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு துர்பேயில் கொட்டப்படும். கடலுக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணி வருகிற டிசம்பருக்குள் முடியும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments